இன்று காலை முதலே போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், சென்னையில் வழக்கம் போல பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 23 போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தனர். ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் என 6 கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த விவகாரத்தில் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடந்த நிலையில், உடன்பாடு ஏற்படவில்லை. இதற்கிடையே பொங்கலுக்கு முன்னதாக இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தனர்.
இதற்கிடையே, நேற்று சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருப்பினும், அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால், பேருந்துகள் ஸ்டிரைக் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. பேச்சுவார்த்தை தோல்வி என்பது தெரிந்தது முதலே பஸ் சேவை படிப்படியாகக் குறைந்தது. இன்று காலை முதல் பல இடங்களில் வழக்கமான எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படவில்லை. பெரும்பாலான ஊர்களில் பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி உள்ளன. அதேநேரம் சென்னையில் பல இடங்களில் பேருந்துகள் வழக்கம் போலவே இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில பணிமனைகளில் போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. சென்னையை பொறுத்தவரை பெரும்பாலான இடங்களில் ஒரு சில பேருந்துகளைத் தவிர மற்ற பேருந்துகள் வழக்கம் போலவே இயங்குகிறது. இந்நிலையில், இது குறித்து எம்டிசி நிர்வாகம் தங்கள் எக்ஸ் பக்கத்தில், “மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இன்று அனைத்து பணிமனைகளில் இருந்து பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட்டு வருகிறது. மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ், அதிகாலையிலே அனைத்து பணிமனைகளுக்கும் சென்று நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல சென்னையில் இன்று காலை நிலவரப்படி 2,098 பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகக் கூறியுள்ள எம்.டி,சி பொது மேலாளர் ஆல்பி ஜான் வர்கீஸ், அரசு பேருந்துகளில் பொதுமக்கள் அச்சமின்றி பயணிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.