தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு பள்ளிகளில் வானவில் மன்றம் என்னும் திட்டம் இன்று தொடங்கப்பட உள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழகத்தில் 3,095 உயர்நிலைப் பள்ளிகள், 3,123 மேல்நிலைப் பள்ளிகள், 6,992 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 13,210 அரசு பள்ளிகளில் இந்த வானவில் மன்றம் தொடங்கப்பட இருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு வகுப்பறையில் கற்பிக்கப்படும் பாடங்களோடு தொடர்புடைய அறிவியல், கணித பரிசோதனைகளை செய்வதற்கு ஏதுவாக, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (ஸ்டெம்) கருத்தாளர்கள் ஆகியோர் பள்ளி ஆசிரியர்களுடன் இணைந்து செயல்பட உள்ளனர்.
அரசு பள்ளிகளில் இந்த திட்டம் புதுமையான முயற்சியாக மேற்காெள்ளப்படுகிறது. அந்த வகையில் இந்த வானவில் மன்றத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திருச்சியில் தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து அனைத்துப் பள்ளிகளிலும் நாளை மாலையில் திட்டம் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.