பெங்களுருவில், காவல்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 74வயது முன்னாள் காவல்துறை அதிகாரி, தன்னுடைய வீட்டில் வாடகைக்கு இருந்தவர்களின் 7 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.
அந்த முதியவரால், பாதிக்கப்பட்ட சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமையை தன்னுடைய தாயிடம் தெரிவித்து, கதறி அழுதுள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் தந்தை, உடனடியாக காவல்துறையில், புகார் வழங்கியிருக்கிறார்.
இது பற்றி, அந்த சிறுமியின் தாயிடம் விசாரணை நடத்திய போது, அவர் தெரிவித்ததாவது, சென்ற திங்கள் கிழமை இரவு 8.30 மணி அளவில் எங்களுடைய வீட்டின் மேல் தளத்திலிருந்து, தரை தளத்தில் விழுந்து கிடந்த பொம்மையை எடுப்பதற்காக, என்னுடைய மகள் சென்றார். ஆனால், வெகு நேரம் ஆன பிறகு அவர் திரும்பி வராததால், நாங்கள் கொஞ்சம் பயந்து போனோம் என்று தெரிவித்த அவர், சிறிது நேரத்தில், என்னுடைய மகள் அழுது கொண்டு திரும்பி வந்தார் என்று கூறியுள்ளார்.
அதோடு, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அந்த ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியிடம் சென்று, இது பற்றி கேட்டபோது, அந்த காவல்துறை அதிகாரி தன்னை மிரட்டியதாக, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கூறியிருக்கிறார். மேலும், அந்த முதியவரின் மகனும் காவல்துறையில் பணியாற்றுகிறார் எனவும், அதோடு, தனக்கு பல ரவுடிகளை தெரியும் என்று தெரிவித்து, தன்னை மிரட்டியதாகவும் கூறி இருக்கிறார். ஆகவே, அமைதியாக நாங்கள் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு, வீட்டை காலி செய்து விடுங்கள் என்று அவர் கூறியதாக, அந்த பெண்ணின் தந்தை குற்றம் சுமத்தி இருக்கிறார்.
அதன் பிறகு காவல்துறை அதிகாரிகள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட அந்த முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கிறார்கள்.
அந்த சிறுமி மற்றும் குற்றம் சுமத்தப்பட்ட இரண்டு பேருக்கும், மருத்துவ பரிசோதனை நடைபெற்றது வருவதாக தெரிகிறது. அந்த சிறுமியின் தந்தையை மிரட்டி, குற்றத்தை மறைக்க முயற்சி செய்த, கைது செய்யப்பட்ட ஓய்வு பெற்ற காவல்துறை உதவி ஆய்வாளரின் மகன் மீதும் வழக்கு பதிவு செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக, தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இந்த சம்பவம் நடைபெறுவதற்கு சுமார் எட்டு நாட்களுக்கு முன்னர் தான், அந்த வீட்டின் மேல் தளத்திற்கு அந்த சிறுமியின் குடும்பத்தினர் குடியேறி இருந்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது.