இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்த அவர் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள சிறப்பு வாய்ந்த கோவில்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து உரையாற்றினார்.
இதற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் “ஸ்ரீராமர் விஜயம் செய்த இடங்களை எல்லாம் பிரதமர் நரேந்திர மோடியும் விஜயம் செய்து வருகிறார். இதனைத் தொடர்ந்து அயோத்தியில் நடைபெற இருக்கும் கும்பாபிஷேக விழாவிற்கு பிரதமர் செல்ல இருப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மோடியின் வருகையால் தமிழக பாஜக மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தன்னுடைய நடைப்பயணத்தின் போது ஊடக சங்கங்கள் தனக்கு தேவையில்லாத இடையூறுகளை ஏற்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார்.
கொங்கு மண்டல பாஷையில் தான் பேசுவதை திரித்து கூறி தனக்கு எதிராக பத்திரிகைகள் பிரச்சாரம் செய்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். தனக்கு எதிராக எந்த கண்டனங்களை எழுப்பினாலும் அதற்கு ஒருபோதும் மன்னிப்பு கேட்க போவதில்லை எனவும் தடாலடியாக தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து கொங்கு பாஷையில் பேச போவதாகவும் அதை மாற்றிக் கொள்ளும் எண்ணம் இல்லை எனவும் தெரிவித்திருக்கிறார் அண்ணாமலை. மேலும் தான் பேசுவது பிரச்சனை இல்லை என்றும் நான் தான் அவர்களுக்கு பிரச்சனை எனவும் தெரிவித்திருக்கிறார். இவரது இந்த புதிய பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.