முஸ்லிம் ஆர்வலர் பழனி பாபாவைக் குறித்து, அவதூறு பரப்பும் செய்தியை, சமூக ஊடகங்களில் பதிவிட்டதற்காக, திருச்சியைச் சேர்ந்த பிஜேபியின் ஐடி பிரிவு செயலரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் இட்ட அந்தப் பதிவு, மாநிலத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
ஜிஹாத் கமிட்டியின் நிறுவனரான முஸ்லீம் ஆர்வலர் பழனி பாபா ஜனவரி 28, 1997ஆம் ஆண்டு படுகொலை செய்து கொல்லப்பட்டார். அவரது நினைவு தினமாகிய கடந்த ஞாயிற்றுக்கிழமை, பிஜேபி ஐடி பிரிவின் செயலர் M.புகழ் மச்சேந்திரன் (44), பழனி பாபாவின் மறைவைக் குறித்து சில சர்ச்சையான கருத்துக்களை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், பழனி பாபா தற்போது உயிரோடு இருந்திருந்தால் நாட்டில் எந்த மாதிரியான பயங்கரவாத செயல்கள் நடந்திருக்கக்கூடும் என்று நினைத்துக் கூட பார்க்க முடியாது என்றும் அவரை கொலை செய்தவர்களுக்கு நன்றி என்றும் கூறி சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டுள்ளார். தகவல் அறிந்த திருச்சி, உறையூர் காவல்துறை அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர்.
இந்தப் பதிவு மதங்களுக்கு இடையே பிரிவினை உண்டாக்குவதாகவும், பொதுவெளியில் அச்சத்தை பரப்புவதாகவும் கருதி அவர் மீது ஐபிசி 153, 505(A), 505(B) ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கைக்கு, தமிழக பிஜேபி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த கைது நடவடிக்கையில் திமுகவின் உள்நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கார்த்திக் கோபிநாத் இது பற்றி பேசுகையில், “நாட்டில் பல்வேறு நபர்கள், சமூக வலைத்தளங்களில் அவதூராகவும், ஆக்ரோஷமாகவும் பேசுகின்றனர். ஆனால் பிஜேபியைச் சேர்ந்தவர்கள் மட்டும், குறி வைத்து கைது செய்யப்படுகிறார்கள். புகழ் அவர்கள், சமீபத்தில் முழங்கால் அறுவை சிகிச்சை பெற்றவர். மருத்துவரின் ஆலோசனையையும் மதிக்காமல், போலீசார் அவரை கைது செய்திருப்பது அதிர்ச்சி அளிப்பதோடு, ஏற்றுக்கொள்ளவும் முடியாதது” என்று தெரிவித்தார்.