ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து விவசாய மின்இணைப்புக்கு மீட்டர் பொருத்தப்படுகிறது. மின்கட்டணம் இல்லாததால் அந்த மீட்டரில் பதிவாகும் மின்பயன்பாட்டை கணக்கெடுப்பதில்லை. மேலும், மின்பயன்பாட்டையும் அறிய முடிவதில்லை. இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், விவசாய மின்இணைப்புகளில் ஸ்மா்ட் மீட்டர் பொருத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் மீட்டரில் எந்த நேரத்தில் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்டது என்பதை துல்லியமாக அறிய முடியும். ஒவ்வொரு பிரிவிலும் தினமும் எந்த நேரத்தில் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது என்ற விவரமும் அறிய முடியும். இதன் மூலம், அதற்கு ஏற்ப மின்னுற்பத்தி, மின்கொள்முதல் செய்ய திட்டமிட முடியும்.
தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்துவதற்காக மீட்டர்களை கொள்முதல் செய்வதற்கான சர்வதேச டெண்டரை ரத்து செய்து தமிழ்நாடு மின்சார வாரியம் கடந்த 2024 டிசம்பர் மாதம் அறிவிப்பு வெளியிட்டது. ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் தொடர்பாக மீண்டும் டெண்டர் விடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் டெண்டரில் அதானி நிறுவனம் குறிப்பிட்டிருந்த தொகை மின்வாரிய பட்ஜெட்டுக்கு அதிகமாக இருப்பதால் டெண்டர் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, தமிழகத்தில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சார இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தின் முதல் தொகுப்பிற்கான ஒப்பந்தத்தை அதானி குழும நிறுவனத்துக்கு தமிழ்நாடு மின்வாரியம் வழங்கக் கூடும் என்று வெளியான செய்திகளுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில்; ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதில், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தில் மோசடி நடந்துள்ளது. இந்த மோசடியின் முக்கிய தயாரிப்பாளராக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் செந்தில் பாலாஜி உள்ளதாக அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.