மின்சார கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாட்டில் மின்கட்டணங்களை ஓர் அலகிற்கு 27.50 பைசா முதல் ரூ.1.25 உயர்த்தப் போவதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. மின்சார பயன்பாட்டின் அடிப்படையில் சில பிரிவினருக்கு 52% வரை கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களால் மின் கட்டண உயர்வை தாங்கிக் கொள்ள முடியாது.தமிழ்நாட்டில் உயர்த்தப்படவிருக்கும் மின்கட்டண விகிதங்களை தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னையில் வெளியிட்டுள்ளார். மின் கட்டண உயர்வு குறித்த தமிழ்நாடு அரசின் கோரிக்கை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்டு, மக்கள் கருத்துக் கேட்பு உள்ளிட்ட நடைமுறைகளுக்குப் பிறகு செப்டம்பர் மாதம் முதல் செயல்பாட்டுக்கு வரக் கூடும். ஆனால், உயர்த்தப்படவுள்ள மின் கட்டண விகிதங்களை ஏழை – நடுத்தர மக்களால் தாங்க முடியாது.
தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தேசித்துள்ள கட்டண உயர்வின் அடிப்படையில் இலவச மின்சாரம் பெறுவோர் தவிர மற்ற அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்படுவார்கள். இரு மாதங்களுக்கு 200 அலகு வரை மின்சாரம் பயன்படுத்துவோர், ஓர் அலகுக்கு 27.50 காசுகள் கூடுதலாக செலுத்த வேண்டும். இது 32.35% உயர்வு ஆகும். 500 அலகு வரை மின்சாரம் பயன்படுத்துவோர் ஓர் அலகுக்கு ரூ.1.19 வரையும், 900 அலகு வரை பயன்படுத்துவோர் அலகுக்கு ரூ.1.25 வரையும் கூடுதலாக செலுத்த வேண்டும். இவர்கள் மொத்தமாக முறையே ரூ.595, ரூ.1,130 கூடுதலாக செலுத்த வேண்டும். இது முறையே 52%, 25% அதிகம். தமிழ்நாட்டு வரலாற்றில் இந்த அளவுக்கு மின்கட்டணம் உயர்த்தப்படவில்லை.மின்சாரக் கட்டணத்தை இந்த அளவுக்கு உயர்த்த தமிழ்நாடு அரசு கூறியுள்ள காரணங்கள் எவையும் ஏற்றுக்கொள்ள முடியாதவை.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கடன்சுமை ரூ.1,59,823 கோடியாகவும், வட்டியாக செலுத்தப்படும் தொகை ரூ.16,511 கோடியாகவும் அதிகரித்து விட்டதாகவும், அவற்றை சமாளிக்க 8 ஆண்டுகளுக்கு பிறகு மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் மின்சாரத் துறை அமைச்சர் கூறியிருக்கிறார். தமிழ்நாடு அரசு உத்தேசித்துள்ள மின்சாரக் கட்டண உயர்வை கைவிட வேண்டும். இது தொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் கொடுத்துள்ள திட்டத்தை திரும்பப் பெற வேண்டும். நிர்வாக சீர்திருத்தங்களின் மூலம் மின் வாரியத்தை லாபத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்