சேலம் மாவட்டத்தில் உள்ள சாதாரண விசைத்தறி நெசவாளர்கள் 50% மானியத்துடன் மின்னணு பலகை பொருத்தும் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாட்டிலுள்ள சாதாரண விசைத்தறிகளில் உற்பத்தி செய்யும் போது நூலிழைகள் அறுந்து, உற்பத்தி நேரம் குறைவதாலும், தொழிலாளர்களின் உற்பத்தி திறன் குறைவதாலும், இதனைச் சீரமைத்து, உற்பத்தி திறனை அதிகரிக்க விசைத்தறிகளுக்கு 50% மானியத்துடன் மின்னணு பலகை பொருத்தப்பட உள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு மற்றும் கூட்டுறவு அமைப்பு சாராத தனியார் விசைத்தறி நெசவாளர்களும் இத்திட்டத்தின் கீழ் மான்யம் பெற தகுதியுடைவர்கள். இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விண்ணப்பிக்கும் பயனாளி தனது பெயரில் உடைமையாக விசைத்தநிகளை வைத்திருக்க வேண்டும். தமிழக அரசின் விசைத்தறிகளுக்கு இலவச மின்சார வழங்கும் திட்டத்தின் பயன்பெற்று வரும் விசைத்தறி நெசவாளர்கள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயன் பெற இயலும். வாடகை கட்டிடத்தில் வைத்து இயக்கி வரும் விசைத்தறி நெசவாளர்கள், கட்டிட உரிமையாளருடன் முறையாக வாடகை ஒப்பந்தம் செய்யப்பட்டதற்கான விவரம் இணைக்கப்பட வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் குடியிருப்பு ஆதாரமாக ஆதார் அட்டை மற்றும் மின்சார இணைப்பு அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பதாரர் மின்னணு பலகையின் விலையில் 50% அல்லது அதிகபட்சம் ரூ.12,000/- இவற்றில் எது குறைவோ அதைச் செலுத்தவதற்கு விண்ணப்பதாரர் விருப்பம் தெரிவிக்க வேண்டும். முதலில் வருபவர்களுக்கு முதலில் சேவை என்ற அடிப்படையில் விண்ணப்பங்கள் பரிந்துரை செய்யப்படும்.