கர்நாடகா, காவேரி ஆற்றில் இருந்து, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு தொடக்கம் முதலே கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருந்தாலும், உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், உச்சநீதிமன்ற உத்தரவை மீற முடியாது என்ற காரணத்தால், பல்வேறு சமயங்களில் கட்டாயத்தின் அடிப்படையில், தமிழகத்திற்கு கர்நாடகா நீரை வழங்கி இருக்கிறது.
ஆனால், தற்போது தமிழகத்திற்கு தேவைப்படும் தண்ணீரை காவேரி நதியில் இருந்து கர்நாடகா அரசு திறந்து விட வேண்டும் என்று காவேரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டதற்குப் பிறகு, அந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு முறையிட்டது ஆனாலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சார்பாகவும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
கர்நாடகா அரசு, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடாமல் இருப்பதற்காக, பல்வேறு காரணங்களை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும் கர்நாடகா அரசு தாக்கல் செய்த மனுவை அவசர மனுவாக கருதி, உடனடியாக, இந்த மனுவை விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது.
ஆனால், கர்நாடக அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்த இந்த மனுவை, உடனடியாக விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதற்கு பதிலாக, செப்டம்பர் மாதம் 21 அதாவது இன்றைய தினம் அந்த மனு விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
முன்னதாக, காவிரி நீரை சரியான சமயத்தில், கர்நாடக அரசு திறந்து விடாததால், தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில், பயிர்கள் கருகத் தொடங்கி இருக்கிறது. ஆகவே, கர்நாடக அரசை உடனடியாக காவிரி நீரை திறந்து விட, உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்து, காவேரி மேலாண்மை வாரியத்திற்கு கோரிக்கை வைத்திருந்தது. அதன் பெயரில், கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவும் பிறப்பித்தது.
இதனை எதிர்த்து, கர்நாடக அரசு தாக்கல் செய்த மனுவை தான் இன்று உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது. அதே நேரம், கர்நாடக அரசு சார்பாக ஏற்கனவே உச்சநீதிமன்றம் தெரிவித்ததன் அடிப்படையில், பல்வேறு சமயங்களில் எங்களிடம் நீர் இருப்பு மிக சொற்பமான அளவு இருந்த போதும் கூட, தமிழகத்திற்கு நாங்கள் நீரை திறந்து விட்டோம். ஆனால் தற்போது எங்களுக்கே போதுமான நீர் இல்லை. ஆகவே, தமிழகத்திற்கு தண்ணீர் தற்போது திறந்து விடுவதற்கான சாத்தியக்கூறே இல்லை என்று தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, கர்நாடக அரசு தரப்பில், அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி, இந்த விவகாரம் குறித்து, ஆலோசிக்கப்பட்டது. அந்த ஆலோசனையின் பெயரில் தான், கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல தமிழக அரசு சார்பாகவும், அனைத்து கட்சி எம்.பிக்களும் ஒன்றாக சேர்ந்து, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களின் தலைமையில், மத்திய நீர்வளத்துறை அமைச்சரை டெல்லியில் சந்தித்து, இது குறித்து, மனு வழங்கி இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.