fbpx

திமுக ஆட்சியில் ரூ.400 கோடி மின்மாற்றி கொள்முதல் ஊழல்…! CBI விசாரணை கோரும் எதிர் கட்சி…

ரூ.400 கோடி மின்மாற்றி கொள்முதல் ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு 2021-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரை மின் வாரியத்திற்கு அதிக விலை கொடுத்து 45,800 மின்மாற்றிகள் வாங்கப்பட்டதில் வாரியத்திற்கு ரூ.400 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும், அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு கையூட்டுத் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரகத்தில் அறப்போர் இயக்கம் புகார் அளித்து ஓராண்டுக்கும் மேலாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசு நிர்வாகத்தை சீரழிக்கும் ஊழல் குறித்த புகார் மீது நடவடிக்கை எடுப்பதில் தமிழ்நாடு அரசும், காவல்துறையும் காட்டும் அலட்சியமும், தாமதமும் கண்டிக்கத்தக்கவை.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மின்சார வாரியத்திற்கு 45,800 மின்மாற்றிகள் வாங்கப்பட்டிருக்கின்றன. வெளிப்படையான ஒப்பந்தப்புள்ளிகள் மூலம் பல்வேறு ஒப்பந்ததாரர்களிடமிருந்து அவர்கள் குறிப்பிட்ட விலைப்புள்ளிகளை விட குறைந்த விலைக்கு மின்மாற்றிகள் வாங்கப்பட்டதாக அரசு கூறிக்கொள்ளும் போதிலும், வெளிச்சந்தையை விட அதிக விலை கொடுத்து தான் மின்மாற்றிகள் வாங்கப்பட்டுள்ளன.

எடுத்துக்காட்டாக 2021-ஆம் ஆண்டில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, 2022-ஆம் ஆண்டில் 500 கிலோ வோல்ட்ஸ் ஆம்பியர்(KVA) திறன் கொண்ட 800 மின்மாற்றிகள் வாங்கப்பட்டன. அதற்காகக் கோரப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகளில் 26 ஒப்பந்ததாரர்கள் சொல்லி வைத்தது போன்று ஒரு மின்மாற்றிக்கு ரூ.13,72,930 என்ற விலையை குறிப்பிட்டிருந்தனர். அதைத் தொடர்ந்து அவர்களுடன் பேச்சு நடத்தி விலையைக் குறைத்து ரூ.12,49,800 என்ற விலைக்கு வாங்கியதாக மின்வாரியம் தெரிவித்தது. ஆனால், மத்திய அரசால் நடத்தப்படும் மின்னணு சந்தைத் தளத்தில் இதன் விலை ரூ.8,91,000 மட்டும் தான். தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் சங்கத்தினர் குறிப்பிடும் விலை ரூ.7,89,753 தான். இவை அனைத்தையும் விட குறைவாக ஒரு மின்மாற்றி ரூ.7,87,311 என்ற விலைக்கு இராஜஸ்தான் மாநில அரசு வாங்கியுள்ளது.

2021 முதல் 2023 வரை மொத்தம் 10 முறை ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. ஒவ்வொரு முறையும் இதேபோன்ற கூட்டுச்சதியும், முறைகேடுகளும் அரங்கேற்றப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக ரூ.1182 கோடிக்கு பல்வேறு திறன் கொண்ட மின்மாற்றிகள் வாங்கப்பட்டதில் ரூ.397 கோடி அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த முறைகேடு குறித்து அனைத்து ஆதாரங்களுடன் அறப்போர் இயக்கம் கடந்த ஆண்டு ஜூலை 6&ஆம் நாள் கையூட்டுத் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரகத்தில் அறப்போர் இயக்கம் புகார் அளித்தது. ஆனால், அதன் மீது முதற்கட்ட விசாரணையைக் கூட இதுவரை காவல்துறை தொடங்கவில்லை.

மின்மாற்றி கொள்முதலில் நடந்த முறைகேடுகளில் முதல் எதிரியாக விசாரிக்கப்பட வேண்டியவர் மின்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி. ஊழல் வழக்கில் சிறை சென்று 471 நாள் சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலையான அவரை பெருந்தியாகம் செய்தவர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டுகிறார்; செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக அரசு எந்திரமே செயல்படுகிறது. அவ்வாறு இருக்கும் போது, மின்மாற்றி கொள்முதல் முறைகேடு விவகாரத்தில் நியாயம் கிடைக்காது. எனவே, மின்மாற்றி கொள்முதலில் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்பட்டது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழ்நாடு அரசு ஆணையிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

English Summary

CBI in connection with Rs 400 crore transformer purchase scam. Pmk leader Anbumani Ramadoss insisted that an investigation should be done.

Vignesh

Next Post

வரலாற்றில் இன்றைய சிறப்பு!. சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்!.

Mon Sep 30 , 2024
Today's special in history! International Translation Day!

You May Like