Celebrities: இந்திய திரை உலகம் இந்த ஆண்டு பல துயரங்களை கண்டுள்ளது. 2024ம் ஆண்டு பாலிவுட் சினிமாவில் பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.நடிப்பு, இசை, டிசைனிங், என பல துறைகளில் பாலிவுட்டில் பிரபலமாக இருந்த பலர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் யார் என்பது குறித்து பார்க்கலாம்.
சுஹானி பட்னாகர் : பாலிவுட் நடிகர் அமீர் கான் நடித்த தங்கல் படத்தில் நடித்த சுஹானி பட்னாகர் உடல்நலக் குறைவால் தனது 19ஆவது வயதில் கடந்த பிப்ரவரி 16ம் தேதி உயிரிழந்தார். அவருடைய மரணத்திற்கு காரணமான நோய் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அது ஒரு அரிய வகையான நோய் என சொல்லப்படுகிறது. சுஹானி, கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான தங்கல் திரைப்படத்தில் பபிதா குமாரி போகத் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மல்யுத்த வீராங்கனைகளான தீபிகா போகத், பபிதா போகத் ஆகியோரின் வாழ்வை மையமாக கொண்டு உருவானது இந்த படம்.
ஜாகிர் உசேன்: உலகப் புகழ்பெற்ற தபேலா மேதை ஜாகிர் உசேன் நுரையீரல் பாதிப்பு காரணமாக அமெரிக்கா,சான்பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனளிக்காததால் கடந்த டிசம்பர் 16ம் தேதி அவர் காலமானார். புகழ்பெற்ற தபேலா கலைஞர் அல்லா ரக்காவின் மகனான ஜாகிர் உசேன், தபேலா இசையில் புரட்சியை ஏற்படுத்தியவர்.
ஜாஸ் மற்றும் மேற்கத்திய கிளாசிக்கல் உட்பட பாரம்பரிய இசையின் வரம்புகளுக்கு அப்பால் அதை எடுத்துச் சென்றார். மிகவும் பிரபலமான இசைக்கலைஞர்களில் ஒருவரான இவர், 60 ஆண்டுகள் இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளார். இவர் தன்னுடைய வாழ்க்கையில் 4 கிராமி விருதுகளை பெற்றுள்ளார். பத்மஸ்ரீ,பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகிய விருதுகளை இந்திய அரசு வழங்கி கவுரவித்துள்ளது.
ரிதுராஜ் சிங்: பிரபல தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகர் ரிதுராஜ் சிங் (59) மாரடைப்பால் கடந்த பிப்ரவரி 20ம் தேதி மரணம் அடைந்துள்ளார். இதை அவரது நண்பருமான நடிகருமான அமித் பெஹ்ல் என்பவர் உறுதிபடுத்தினார். இவர் இந்தி படங்கள் மட்டுமல்லாது, பல சீரியல்களிலும் பல்வேறு மொழி படங்களிலும் நடித்து மக்களின் மனதில் இடம்பெற்றவர். சமீபத்தில் அஜீத் நடித்த துணிவு படத்தில் ஒரு காட்சியில் நடித்து தமிழ்மக்களின் மனதிலும் இடத்தை பிடித்தவர்.
குறிப்பாக இவர் பனேகி அப்னி பாத், ஜோதி, ஹிட்லர் திதி, ஷபத், வாரியர் ஹை, ஆஹத், போன்ற படங்களில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு வெளியான யாரையன் 2-தான் இவரது கடைசி படம். அவர் இறப்பதற்கு முன், அனுபமா என்ற சீரியலில் யஷ்பால் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
பங்கஜ் உதாஸ்: ஹிந்தி திரையுலகில் உருகவைக்கும் கசல் பாடல்களை பாடி மக்கள் மனதை கவர்ந்த மிகஞ்சிறந்த பாடகர்தான் பங்கஜ் உதாஸ். குஜராத்தில் உள்ள ஜெட்பூரில் பிறந்த பங்கஜ் பாலிவுட் சார்ந்த கசல் பாடகர்களுள் மிக உயரமான இடத்தைப் பிடித்தவர். சிகரங்களைத் தொட்டவர். கடந்த 2018ம் ஆண்டு வரை அவர் ஏராளமான திரையிசை மற்றும் கசல் கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார்.
‘கசல் உலகின் முடிசூடா மன்னன்’ என புகழப்பட்ட இவர்,
1980-ல் வெளியான ‘ஆஹத்’ (Aahat) ஆல்பம் மூலம் தனது இசைப்பயணத்தைத் தொடங்கி 2011-ம் ஆண்டு வரை 50 ஆல்பம் பாடல்களை பாடியுள்ளது சிறப்பு. ‘நாம்’ (NAAM) இந்திப் படத்தில் வெளியான ‘சிட்டி ஆயி ஹை’ (Chitti Aayi Hai) பாடல் மக்களிடையே மிகவும் பிரபலமானது.
மும்பையில் வசித்து வந்த இவர் வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் பிப்ரவரி 26ம் தேதி (திங்கட்கிழமை) காலமானார். புகழ்பெற்ற கசல் பாடகராக சர்வதேச அளவில் அறியப்பட்டு வந்த இவருக்கு கடந்த 2006 ஆம் ஆண்டு மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் பத்மஸ்ரீ விருது அளித்து பெருமைப்படுத்தினார்.
அதுல் பர்சுரே: பிரபல இந்தி மற்றும் மராத்தி பட நகைச்சுவை நடிகர் அதுல் பர்சுரே கடந்த அக்டோபர் மாதத்தில் காலமானார். அவருக்கு வயது 57. நாடகங்களில் இருந்து சினிமாவுக்கு வந்த இவர் இந்தியில், ஜிந்தகி 50 50, லவ் ரெசிபி, கட்டா மிட்டா, கல்கத்தா மெயில் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். சின்னத்திரை தொடர்களிலும் பங்கேற்று வந்த அவர், புகழ்பெற்ற சின்னத்திரை நிகழ்ச்சியான கபில் சர்மா காமெடி ஷோவிலும் பங்கேற்றிருந்தார்.
சாரதா சின்ஹா : ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நாட்டுப்புற பாடகி சாரதா சின்ஹா கடந்த நவம்பர் 5ம் தேதி உயிரிழந்தார். 1952ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி பீகார் மாநிலத்தில், சுபல் மாவட்டத்தில் உள்ள ஹுலாஸ் கிராமத்தில் பிறந்தவர் சாரதா சின்ஹா.
1970களில் சாரதா சின்ஹா தனது நாட்டுப்புற இசைப் பயணத்தை தொடங்கினார். பின்னர் பாலிவுட் திரைப்படங்களிலும் பல்வேறு பாடல்களை பாடினார். குறிப்பாக 1994இல் வெளியான ‘Hum aapke hain koun’ என்ற படத்தில் இடம்பெற்ற பாபூல் பாடல் மிகவும் பிரபலமடைந்தது. மத்திய அரசு நாட்டுப்புற பாடகி சாரதா சின்ஹாவை கௌரவப்படுத்தும் வகையில் 2018இல் பத்ம பூஷன் விருது வழங்கியது.
குமார் சஹானி: பிரபல இந்தி பட இயக்குநர் குமார் சஹானி நீண்டகாலமாக உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் காலமானார். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள,லர்கானாவில் பிறந்தவர் குமார் சஹானி. பிரிவினைக்குப் பிறகு அவர் குடும்பம் மும்பை வந்தது.புனே பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்த குமார்சஹானி, ‘மாயா தர்பன்’ என்ற படம் மூலம் இயக்குநர் ஆனார்.
1972-ம் ஆண்டு வெளியான இந்தப் படம்தேசிய விருதைப் பெற்றது. 12 வருடங்களுக்குப் பிறகு ‘தாரங்’ என்ற அடுத்த படத்தை இயக்கினார். இதுவும் தேசிய விருதைப் பெற்றது. அடுத்து, காயல்கதா, கஸ்பா, சார் அத்யாய் உட்பட பல படங்களை இயக்கியுள்ளார். இவர் திரைப்படங்கள் இத்தாலியின் பியர் பாவ்லோ பசோலினி, ரஷ்யாவின் ஆண்ட்ரீ தர்கோவ்ஸ்கியுடன் ஒப்பிடப்பட்டன. தனது படங்களுக்காக சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ள இவர் கொல்கத்தாவில் வசித்து வந்தார்.
விகாஸ் சேத்தி : : 2000 காலகட்டத்தில் கியுங்கி சாஸ் பி கபி பஹு தி, கஹியின் தோ ஹோகா மற்றும் கசௌதி ஜிந்தகி கே போன்ற பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து பெயர் பெற்ற பாலிவுட் நடிகர் விகாஸ் சேத்தி செப்டம்பர் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அவரது 48வது வயதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஷியாம் பெனகல் : சர்வதேச அளவில் புகழப்படும் பாலிவுட் இயக்குநர் ஷியாம் பெனகல் மும்பையில் டிசம்பர் 23ம் தேதி காலமானார். அங்கூர், நிஷாந்த், மன்தன், பூமிகா உள்ளிட்ட படங்களை இயக்கியதன்மூலம் சர்வதேச அளவில் மிகப்பெரிய இயக்குநராக அறியப்பட்ட ஷியாம் பெனகல் தன்னுடைய 90வது வயதில் காலமானார். கடந்த 1974ம் ஆண்டில் ஆங்கூர் படம் மூலம் இவர் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்திருந்தார். ஆங்கூர், பூமிகா, ஜூனூன், அரோஹன், மந்தன், நிஷாந்த் உள்ளிட்ட ஏராளமான படங்களின் மூலம் சர்வதேச அளவில் சிறந்த இயக்குநராக அறியப்பட்டார்,
உஸ்தாத் ரஷித் கான்: மியூசிக் மேஸ்ட்ரோ என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பாலிவுட் பாடகர் உஸ்தாத் ரஷித் கான் கடந்த ஜனவரி 9ம் தேதி காலமானார். உஸ்தாத் ‘ஜப் வி மெட்’, ’மை நேம் இஸ் கான்’ உள்ளிட்ட பல படங்களில் பல பிரபலமான பாடல்களைப் பாடியுள்ளார். பாலிவுட் மட்டுமல்லாது, டோலிவுட்டிலும் இவரது குரல் ஒலித்திருக்கிறது. கடந்த 2022ம் ஆண்டில், மத்திய அரசு இவருக்கு நாட்டின் மூன்றாவது உயரிய குடிமகன் விருதான பத்ம பூஷன் விருதை வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.
ராமோஜி ராவ்: ஊடக தொழிலதிபரும், ராமோஜி ராவ் ஸ்டூடியோ நிறுவனருமான ராமோஜி ராவ் ஜூன் 8ம் தேதி காலமானார். 1996 ஆம் ஆண்டு ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டி என்ற ஸ்டூடியோவை தொடங்கினார். இது தான் உலகின் மிகப்பெரிய திரைப்பட ஸ்டுடியோவாகும். இது பல ஊழியர்களின் வாழ்வாதாரமாகவும், உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான மக்களின் பொழுதுபோக்கு இடமாகவும் உள்ளது.
ராமோஜி ராவ், பெண் உரிமை, சமத்துவத்திற்கான நீதி மற்றும் பல மனித நலத் திரைப்படங்களை சித்தரிக்கும் சக்திவாய்ந்த திரைப்படங்கள் மூலம் தெலுங்கு பார்வையாளர்களின் இதயங்களில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்தார். திரைப்படங்களுக்கான வசனங்களைத் தேர்ந்தெடுத்து பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதில் ராமோஜி ராவ் முக்கிய பங்கு வகித்தார்.
ராமோஜி ஃபிலிம் சிட்டி தவிர, ராமோஜி ராவ் மற்ற நிறுவனங்களை சொந்தமாக வைத்திருக்கிறார். தனது அசாத்திய முயற்சியால் அதை சிறந்த நிலைக்கு கொண்டு வந்தார். அந்த வகையில் அவர் 1995 இல் E TV நெட்வொர்க் சேனலின் கீழ் 12 சேனல்களைக் கொண்ட குழுவைத் தொடங்கினார், பல்வேறு மொழிகளில் பொழுதுபோக்கு ஆதாரங்களுடன் தகவல்களை ஒளிபரப்பினார். E Tv சேனல் தினசரி தொலைக்காட்சி தொடர்கள், தெலுங்கு, ஹிந்தி, பங்களா, மராத்தி, கன்னடம், ஒரியா, குஜராத்தி மற்றும் உருது ஆகிய மொழிகளில் நாட்டின் பிற மாநிலங்களில் பார்வையாளர்களை மகிழ்விக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில் பிரபலமான சேனல்களில் ஒன்றாகும்.
கடந்த மார்ச் 27ம் தேதி காமெடி நடிகர் சேஷு காலமானார். அவரை தொடர்ந்து கடந்த மார்ச்29ம் தேதி நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பு காரணமாக காலமானார். இதேபோல், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் விஸ்வேஷ்வர ராவ் (64) ஏப்ரல் 2ம் தேதி காலமானார்.
டேனியல் பாலாஜி: சின்னத்திரை மூலம் வெள்ளித்திரைக்குள் என்ட்ரி கொடுத்த நடிகர். தொடக்கத்தில் சிறு சிறு பாத்திரங்களில் நடித்து வந்தவருக்கு கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘காக்க காக்க’ படத்தில் ஸ்ரீகாந்த் என்ற போலீஸ் பாத்திரத்தில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றார். பின்னர் ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் வில்லனாக நடித்து அதீத கவனம் ஈர்த்தார்.
தொடர்ந்து பொல்லாதவன் (ரவி), வை ராஜா வை, அச்சம் என்பது மடமையடா, பைரவா, வட சென்னை, பிகில் போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் அவர் நடித்துள்ளார். பெரும்பாலும் வில்லன் நடிகராக நடிப்பார். அதற்கு அவரது குரல், மேனரிசம், உடல் மொழியும் பொருத்தமாக இருக்கும்.
சூர்யா கிரண்: பிரபல இயக்குனரும், கதாசிரியரும் குழந்தை நட்சத்திரமாக நடித்தவருமான சூர்யா கிரண் திங்கள்கிழமை (மார்ச் 11) தனது 48 வயதில் சென்னை இல்லத்தில் காலமானார். ‘சிநேகிக்கன் ஒரு பெண்’ (1978) படத்தில் குழந்தை நட்சத்திரமாகவும், இந்தியாவின் முதல் 3டி திரைப்படமான ‘மை டியர் குட்டிச்சாத்தான்’ (மலையாளம்) உட்பட சுமார் 200 தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படங்களில் ‘மாஸ்டர்’ சுரேஷாகவும் நடித்துள்ளார்.
படிக்காதவன், ரங்கா, ‘கல்லுக்குள் ஈரம்’, ‘காதல் மீன்கள்’, ‘மௌன கீதங்கள்’, ‘முந்தானை முடிச்சு’, ‘மங்கம்மா சபாதம்’ மற்றும் ‘மனிதன்’, உள்ளிட்ட தமிழ் படங்களிலும் மற்றும் ‘ஸ்வயம் க்ருஷி’ மற்றும் ‘கைதி எண் 786’ உள்ளிட்ட தெலுங்குப் படங்களிலும் சூர்யா கிரண் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
சூர்யா கிரண் பின்னர் இயக்குனராக மாறினார். சுமந்த் மற்றும் ஜெனிலியா நடிப்பில் 2003 ஆம் ஆண்டு வெளியான அவரது முதல் படமான ‘சத்யம்’ திரைப்படம் 150 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடியது. ‘சத்யம்’ படத்தின் மகத்தான வெற்றிக்குப் பிறகு, ‘தானா 51’, ‘பிரம்மாஸ்திரம்’, ‘ராஜூ பாய்’ மற்றும் ‘அத்தியாயம் 6,’ போன்ற தெலுங்குப் படங்களை இயக்கினார்.
சிஐடி சகுந்தலா: தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா. இவர் கடந்த செப்டம்பர் மாதம் 18ம் தேதி தனது 84வது வயதில் காலமானார்.
தெகிடி, லிப்ட், இரும்புத்திரை உள்ளிட்ட படங்களில் நடித்த பிரதீப் கே. விஜயன், தனது 45வது வயதில் மாரடைப்பால் காலமானார். பிரபல சீரியல் நடிகர் நேத்ரன், புற்றுநோயால் சமீபத்தில் காலமானார். இவரின் மரணம் சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ், கடந்த நவம்பர் 9ம் தேதி வயதுமூப்பு காரணமாக தனது 80வது வயதில் காலமானார். நடிகர் பிஜிலி ரமேஷ், கடந்த ஆகஸ்ட் மாதம் உடல்நலக் குறைவால் காலமானார். சின்னத்திரை மற்றும் திரைப்பட நடிகர் அடடே மனோகர், கடந்த பிப்ரவரி 19ம் தேதி தனது 82வது வயதில் காலமானார். பருத்திவீரன் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் செவ்வாழை ராசு. கடந்த ஏப்ரல் மாதம் 16ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான மோகன் நடராஜன், கடந்த செப்டம்பர் 4ம் தேதி உயிரிழந்தார்.
Readmore: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவிற்கு தவெக தலைவர் விஜய் இரங்கல்…!