தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், செய்யூரில் சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டில் நடைபெற்ற அரசு விழாவில்,ரூ.280 கோடியே 38 இலட்சம் செலவில் 47 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 497 கோடியே 6 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 5 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும், 508 கோடியே 3 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை 50,606 பயனாளிகளுக்கு முதலமைச்சர் வழங்கினார். நகர்ப்புறப் பகுதிகளில் பட்டாக்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்ட நெடுங்காலமாக வீடு கட்டி குடியிருக்கும் 214 நபர்களுக்கு நிலங்களை வரன்முறைப்படுத்தி பட்டாக்கள் வழங்கி, திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர்; செங்கல்பட்டு மாவட்டத்தில், தொழில் வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கின்ற வகையில், செய்யூரில், சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று இந்த விழா மூலமாக அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றன். நாங்கள் எதை அறிவித்தாலும் அதெல்லாம், அரசாணையாகும். வேகமாக செயல்பாட்டிற்கு வரும். அதுமட்டுமல்ல, திட்டங்களை முடித்து, திறப்பு விழாவுக்கு நானே வருவேன் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.