ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது..
ராகுல்காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக தலைமையிலான அரசை கண்டிக்கும் இன்று நாடு முழுவதும் காந்தி சிலைகள் முன் ஒரு நாள் ‘சங்கல்ப் சத்தியாக்கிரக போராட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சி நேற்று அறிவித்தது.. உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்திற்கு கடுமையான அச்சுறுத்தலாக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் தொழிலதிபர் கெளதம் அதானிக்கும் இடையிலான உறவை ராகுல் காந்தி தொடர்ந்து கேள்வி எழுப்பியதற்கு எதிர்வினையாக ராகுல் காந்திக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது எனவும், அவர்ம் தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்று குற்றம் சாட்டியது.
அதன்படி இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. அந்த வகையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் டெல்லி ராஜ்காட்டில் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று கூறி காங்கிரஸ் போராட்டத்திற்கு டெல்லி காவல்துறை அனுமதி வழங்க மறுத்தது.. மேலும் அப்பகுதியில் 144 தடை உத்தரவை காவல்துறையினர் விதித்துள்ளனர்.. காலை 10 மணியளவில் தொடங்கிய இந்த போராட்டம் மாலை 5 மணிக்கு முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அவதூறு வழக்கில் தண்டனை பெற்று மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு, ராகுல் காந்தி நேற்று தனது முதல் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாகவும், “பிரதமர் நரேந்திர மோடிக்கும் அதானி குழுமத்துக்கும் இடையேயான உறவு குறித்து கேள்வி கேட்க தான் பயப்படவில்லை” என்றும் கூறினார்.
மேலும் பேசிய அவர் “எனது குரல் நசுக்கப்படுகிறது.. 4 அமைச்சர்களின் பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சபாநாயகரிடம் பேசினேன்.. ஆனால் என்னை பேச அனுமதிக்கவில்லை.. பிரதமர் நரேந்திர மோடிக்கும் கௌதம் அதானிக்கும் இடையேயான உறவு புதிதல்ல.. ஆனால் அதானியின் போலி நிறுவனங்களில் இருந்து வெளிவந்துள்ள ரூ.20,000 கோடி யாருடைய பணம் என்று நான் கேள்வி கேட்பதை நிறுத்த மாட்டேன்.
நான் ஒரு காந்தி, சாவர்க்கர் அல்ல.. காந்திகள் மன்னிப்பு கேட்க மாட்டார்கள்.. நாடு எனக்கு அன்பையும் மரியாதையையும் அளித்துள்ளது.. பாராளுமன்றத்தில் எனது அடுத்த உரைக்கு பிரதமர் பயப்படுவதால் தான் தகுதி நீக்கம் செய்யப்பட்டேன்.. நான் பாராளுமன்றத்திற்குள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, நாட்டுக்காக தொடர்ந்து போராடுவேன்..” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..