நாட்டில் இதுவரை 312 பேருக்கு கொரோனா துணை மாறுபாடு JN.1 பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் 47 சதவீதம் பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் துணை மாறுபாடு JN.1 பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசுகளும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், பரிசோதனைகளை அதிகரிக்கவும் சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டும் வருகிறது. இந்தநிலையில், இந்திய கொரோனா மரபியல் கூட்டமைப்பின் தரவுகளின்படி, நாட்டில் இதுவரை 312 பேருக்கு கொரோனா துணை மாறுபாடு JN.1 பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் 47 சதவீதம் பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, கேரளாவில் 147, கோவாவில் 51, குஜராத்தில் 34, மகாராஷ்டிராவில் 26, தமிழகத்தில் 22, டெல்லியில் 16, கர்நாடகாவில் 8, ராஜஸ்தானில் 5, தெலுங்கானாவில் 2, ஒடிசாவில் ஒருவருக்கும் துணை மாறுபாடு JN.1 பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த புதிய வகை கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்பு மற்றும் பரிசோதனை நடைமுறைகளை தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்திவருகிறது.
மேலும், இந்திய கொரோனா மரபியல் கூட்டமைப்பின் தரவுகளின்படி, இந்தியாவில் கடந்த டிசம்பரில் 279 பேருக்கும், நவம்பரில் 33 பேரும் புதிய மாறுபாடு கொரோனா பாதிப்பு கோவிட் வழக்குகள் JN.1 இருப்பது உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.