மேற்குவங்க மாநிலத்தின் சுபத்ராய் சரணை பகுதியில் 7-வது வார்டில் உள்ள காந்தி தொடக்கப் பள்ளி அருகே மர்ம நபர்களால் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
மர்ம நபர்கள் வீசிய வெடிகுண்டு தாக்குதலில் காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வெடிகுண்டு வீச்சு சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் வெடிகுண்டு தாக்குதலால் பரவிய தீயை அணைத்து வருகின்றனர்
இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய 7-வது வார்டு கவுன்சிலர் சர்மிஷ்தா மஜும்தார்” நான் மருத்துவமனைக்கு சென்றிருந்தபோது குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. இது மிகவும் துரதிஷ்டவசமான ஒரு நிகழ்வு. குண்டு வெடிப்பிற்கான காரணம் என்னும் தெரியவில்லை . குற்றவாளிகள் நிச்சயமாக தண்டிக்கப்பட வேண்டும் என தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவத்தால் அப்பகுதி போர்க்களம் போல காட்சியளிக்கிறது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.