புளியங்குடி எலுமிச்சைக்கு புவிசார் குறியீடு மத்திய அரசு வழங்கியதற்கு திமுக தான் காரணம் என விவசாயத்துறை அமைச்சர் அண்ணாமலைக்கு பதில் தெரிவித்துள்ளார்.
தென்காசியில் சமீபத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், புளியங்குடி எலுமிச்சைக்கு புவிசார் குறியீடு செயலாக்கப்பட்டு வருவதாகவும், ஏப்ரல் முதல் வாரத்திற்குள் அறிவிக்கப்படும் என்றும் புளியங்குடி மக்களுக்கு உறுதியளித்ததாக தெரிவித்துள்ளார். புளியங்குடி எலுமிச்சைக்கான புவிசார் (GI) இன்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறோம் என்றும், எங்களின் கோரிக்கையை பரிசீலித்த வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயலுக்கு தமிழக பாஜக சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என அண்ணாமலை கூறியிருந்தார்.
இதற்கு விவசாயத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தனது எக்ஸ் தளத்தில் அண்ணாமலையை டேக் செய்து; எங்களை சட்டமன்றத்தில் நாடகமாடுவதாக கூறும் தங்களின் நாடகத்திற்கு ஒரு அளவே இல்லையா..? தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் 2021-22 ஆம் ஆண்டு வேளாண்மை தனி நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டு, தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம் மற்றும் மேல புளியங்குடி விவசாயிகள் சங்கம் சார்பில் 25.04.2022 அன்று புளியங்குடி எலுமிச்சைக்கு புவிசார் குறியீட்டிற்கு விண்ணப்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்நது 30.11.2024 அன்றே புவிசார் குறியீடு இதழில் வெளியிடப்பட்டது, அதாவது தங்களின் தென்காசி பயணத்திற்கு முன்பே புவிசார் குறியீடு இதழில் வெளியிடப்பட்டு, ஆட்சேபனை தெரிவிக்கும் காலமான 4 மாதங்கள் முடிவடைந்து புவிசார் குறியீடு 31.03.2025 அன்று சான்றிதழ் எண்.692ல் பெறப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் வேளாண்மை – உழவர் நலத்துறையின் சீரிய முயற்சியின் காரணமாக புளியங்குடி எலுமிச்சை மட்டுமின்றி சோழவந்தான் வெற்றிலை, பண்ருட்டி பலாப்பழம், பண்ருட்டி முந்திரி, விருதுநகர் சம்பா வத்தல், செட்டிகுளம் சின்ன வெங்காயம், ராமநாதபுரம் சித்திரைக்கார் அரிசி ஆகியவற்றிற்கும் புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
மேலும் 28 வேளாண் விளைபொருட்களுக்கு புவிசார் குறியீட்டிற்கு விண்ணப்பித்து வழங்கப்படும் நிலையில் உள்ளது, 2025-26ம் ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் மேலும் ஐந்து பொருட்களுக்கு விண்ணப்பிக்க உள்ளதை அறிவித்துள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.