திமுக எம்பி ஜெகத்ரட்சகன் 1,250 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளார்.
திருத்தணியில் நடைபெற்ற என் மண் என் மக்கள் யாத்திரையில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை; இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத் தலைவராகவும், இரண்டாவது குடியரசுத் தலைவராகவும் உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் பிறந்த மண். யார் யாரோ பெயரில், மக்களின் வரிப்பணத்தில் பெயர் வைப்பதும் கட்டிடம் கட்டுவதுமாக இருக்கும் தமிழக அரசியல் கட்சிகள், ஆசிரியர்களின் பெருமையை உயர்த்திய, இம்மண்ணில் பிறந்து நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற இத்தனை ஆண்டுகளாக முன்வரவில்லை. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும், திருத்தணியில் அவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும். அந்தந்த மண்ணின் பெருமைக்குரிய மனிதர்களை அடையாளப்படுத்தாமல், எல்லா இடங்களிலும் திராவிடக் கட்சிகளின் தலைவர்களின் பெயரை வைப்பது வெட்கக் கேடு.
1956 ஆம் ஆண்டு, மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, திருத்தணி ஆந்திராவுடன் இருந்தது. 1960 ஆம் ஆண்டு வரை ஆந்திராவுடன் இருந்து திருத்தணியை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்று போராடிய சிலம்புச் செல்வர் ஐயா ம.பொ.சிவஞானம் அவர்கள் குடும்பம் இன்று, பாஜகவில் இருப்பது பெருமையளிக்கிறது. தேச நலனை, நாட்டின் நல்ல எதிர்காலத்தை, இளைஞர்கள், மாணவர்கள், மகளிர் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டை விரும்பும் நல்ல மனிதர்கள் அனைவரும் பாஜகவில் இணைந்து கொண்டிருப்பது, மகிழ்ச்சி தருவதாகும்.
இந்தியாவிலேயே மிகப் பெரிய பணக்கார பாராளுமன்ற உறுப்பினரை அரக்கோணம் பெற்றிருக்கிறது. ஆனால், அவரால் திமுகவுக்கு மட்டும்தான் பயனே தவிர, அரக்கோணம் தொகுதிக்கு ஜெகத்ரட்சகன் அவர்களால் எந்தப் பயனும் இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் தொகுதிக்கு எந்தத் திட்டங்களையோ, மக்கள் பணிகளையோ அவர் கொண்டு வந்ததில்லை. மாறாக, 1,250 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தார் என்ற அவப்பெயர்தான் தொகுதிக்கு வந்திருக்கிறது. அவரது வீட்டில் நடந்த வருமான வரிச் சோதனையில், 1,250 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்திருப்பதாக, கண்டறிந்திருக்கிறார்கள்.
எட்டு லட்சம் கோடி ரூபாய் கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. திமுக ஆட்சிக்கு வந்து 32 மாதங்களில், இரண்டு லட்சத்து அறுபத்தி ஒன்பதாயிரம் கோடி புதிய கடன் வாங்கியுள்ளது. தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும், மூன்று லட்சத்து இருபதாயிரம் ரூபாய் கடன் சுமை இருக்கிறது. திமுகவினர் கொள்ளையடிக்க, மக்களின் தலையில் கடன் சுமையைத் திணித்துக் கொண்டிருக்கிறார்கள் என கூறினார்.