நீட் தேர்வை தவறாக சித்தரித்து மாணவர்களுக்கு திமுக அரசு மனச்சுமையை ஏற்படுத்துவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன், நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்டார் என்றும், மகன் இறந்த துக்கம் தாளாமல் அவரது தந்தை திரு செல்வசேகர் அவர்களும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூரில் என் மண், என் மக்கள் யாத்திரையின் பொழுது செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, நீட்டிற்கு இன்னொரு உயிர் போனால் அதற்கு திமுக தான் காரணம் என்றார். எந்தச் சூழ்நிலையிலும், உயிரை மாய்த்துக் கொள்வது என்பது எதற்கும் முடிவல்ல, எதற்கான தீர்வுமல்ல என்பதை மாணவச் செல்வங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் ஒரு நிமிட தவறான முடிவால், உங்கள் பெற்றோர்கள் ஆயுட்காலம் முழுவதும் வேதனைப்படும்படி செய்வது தவறு.
மாணவர்கள், பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, கல்லூரித் தேர்வுகள், அரசுப் பணித் தேர்வுகள், குடிமையியல் பணித் தேர்வுகள் என தங்கள் கல்வியின் ஒவ்வொரு கட்டத்திலும் பல்வேறு பொதுத் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வாழ்க்கையில் பரிட்சைகள் பள்ளி கல்லூரி பருவத்துடன் முடிவடைவதில்லை என்பதே எதார்த்தமான உண்மை என கூறினார்.