சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த கன மழை நாள் மக்களின் இயல்பு வாழ்க்கையே கேள்விக்குறியாகி இருக்கிறது. நகரம் முழுவதும் தண்ணீர் தேங்கி இருப்பதாகவும் போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் திமுக அரசின் செயல்பாடு மிகச் சிறப்பாக இருக்கிறது எனவும் இயற்கை சீற்றத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை திமுக அரசு மேற்கொண்டு வருவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இயற்கை சீற்றத்தை அரசியலாக பார்க்கிறார்கள் எனவும் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக பேசியிருக்கும் அமைச்சர் “சென்னையில் இந்த இயற்கை சீற்றத்தால் 19 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. இதனை மழை என்று சொல்ல முடியாது. பெரும் மழை என்று தான் கூற வேண்டும். எனினும் ஆளும் திமுக அரசு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மக்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சிறப்பாக செய்து வருகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டை விட தற்போது மிகச் சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன.
முதலமைச்சர் ஸ்டாலின் கட்டுப்பாட்டு அறைக்கு வந்து அனைத்து பணிகளையும் கண்காணித்து வருகிறார். மேலும் கட்டளை இடுவதோடு நின்று விடாமல் அவரே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று நிவாரண பணிகளை பார்த்து வருகிறார். நேற்று இரவு முழுவதும் தூங்காமல் நிவாரண பணிகளை கேட்டு அறிந்தார். வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் இதனை வைத்து வேண்டாத சக்திகள் அரசியல் செய்து வருவதாகவும் கடும் கண்டனத்துடன் தெரிவித்து இருக்கிறார்.