ஓலா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காகக் குறைந்த வட்டியில் ஐந்தாண்டு கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தனியார் பைனான்ஸ் நிறுவனங்களுடன் சேர்ந்து இந்த கடன் திட்டத்தை ஓலா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு ரூபாய் கூட முன்பணம் இல்லாமல் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும். இதுகுறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள். எலெக்ட்ரிக் வாகனச் சந்தையில் ஓலா நிறுவனம் மிகப்பெரிய வளர்ச்சியைச் சந்தித்து வருகிறது. தற்போது இந்தியாவில் அதிகமாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்யும் நிறுவனமாக ஓலா நிறுவனம் இருந்து வருகிறது. இந்நிறுவனம் கடந்த சில மாதங்களாகத் தனது வாடிக்கையாளர்களுக்குக் கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் அதை லோன் மூலம் பெற்றுக் கொள்ளும் வசதியை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரை டவுன் பேமெண்ட் கட்டி ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கும் கடன் திட்டம் தான் இருந்தது. தற்போது ஓலா நிறுவனம் இதை மேம்படுத்தியுள்ளது.
ஓலா நிறுவனம் ஐடிஎப்சி ஃபஸ்ட்டு பேங்க் மற்றும் எல்&டி பைனான்சியல் சர்வீசஸ் ஆகிய நிறுவனங்களுடன் சேர்ந்து தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி இருப்பதிலேயே குறைந்த வட்டியாக 6.99 சதவீத வட்டிக்கு 60 மாத லோனை அதாவது ஐந்தாண்டுகளுக்கான கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த கடன் திட்டத்தின்படி ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குபவர்கள் முன்பணமாக எதுவும் செலுத்தப்பட வேண்டியதில்லை. வாகனத்திற்கான முழு விலையும் இந்த கடன் திட்டத்திலேயே வழங்கப்படும். இதுவரை எலெக்ட்ரிக் டூவீலர்களுக்கு 36 மாதங்கள் முதல் 48 மாதங்கள் வரை தான் கடன் வழங்கப்பட்டு வந்தது. தற்போது ஓலா நிறுவனம் முதன்முறையாக 60 மாத கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கடன் திட்டத்தின் மூலம் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பெற வேண்டும் என்றால் வாடிக்கையாளர்கள் ஓலா அனுபவ மையங்களை அணுகலாம். இதை அவர்கள் ஓலா ஆப் மூலம் அவர்களது வாகன பர்சேஸை இறுதி செய்வதற்கு முன்பு கடன் திட்டம் குறித்த விவரங்களை உறுதி செய்ய வேண்டும். இந்த கடன் திட்டத்தின் படி முன்பணம் எதுவும் செலுத்த வேண்டிய தேவையில்லை.
இது குறித்த அந்நிறுவனத்தின் தலைமை தொழில் அதிகாரி அங்குஸ் அகர்வால் கூறும் போது: “ஒரு மார்க்கெட்ட லீடராக நாங்கள் பல பைனான்ஸ் பார்ட்னர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். இவர்கள் மூலம் டயர்1 சிட்டி மட்டுமல்லாமல் டயர்2, டயர் 3 சிட்டிகளிலும் எங்கள் கடன் திட்டத்தை விரிவு படுத்தி உள்ளோம். இந்திய மக்கள் எலெக்ட்ரிக் டூவீலர்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பைனான்ஸ் நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் டூவீலர்களை வாங்க ஏற்றவாறு கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தி வருகின்றன. இதனால் இன்று ஒரு பெட்ரோல் ஸ்கூட்டரை வாங்குவதைவிட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வாங்குவதற்கான செலவு பாதியாகக் குறைந்துள்ளது. தற்போது நாம் இவி விற்பனையை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம். இதனால் மக்களுக்கு ஏற்ற இவி ஸ்கூட்டரை தயாரிக்க முடிவு செய்துள்ளோம் இதனால் ஒவ்வொருவரும் அவர்களது பயன்பாட்டிற்கு ஏற்ற ஸ்கூட்டரை ஓலாவில் பெற முடியும் என்பதை நாங்கள் உறுதி செய்வோம்.”எனக் கூறினார். டிரைவ்ஸ்பார்க் கருத்து: மத்திய அரசு ஃபேம் 2 மானியத்தைக் குறைத்த பிறகு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை அதிகமாகியுள்ளது. இதைச் சமாளிக்க இந்த 60 மாத கால கடன் திட்டம் நிச்சயம் உதவும். இதனால் ஒவ்வொரு மாதமும் எலெக்ட்ரிக் வாகனத்திற்காக மக்கள் செலவு செய்ய வேண்டிய பணம் குறைவாக இருக்கும். இதனால் அதிகமான மக்கள் இந்த வாகனத்தை வாங்க முன் வருவார்கள்.