குடிபோதையில் வாக்குவாதம் செய்த கணவரை கொலை செய்து சடலத்தின் அருகே இரவு முழுவதும் தூங்கிய மனைவியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அதுல். இவர் மனைவி அன்னு மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். மதுபோதைக்கு அடிமையான அதுல், தினமும் குடித்துவிட்டு மனைவியுடன் சண்டையிடுவதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்றும் மனைவியுடன் வாக்குவாதம் செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த மனைவி அன்னு கல்லைக் கொண்டு கணவர் அதுலை பலமாக தாக்கியுள்ளார். அவர் மயங்கி விழுந்ததும் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர், இரவு முழுவதும் கணவரின் சடலம் அருகே படுத்து உறங்கியுள்ளார்.
மறுநாள் காலையில் குழந்தைகளிடம் தந்தையை எழுப்ப வேண்டாம் என்று கூறிவிட்டு, வேலைக்கு புறப்பட்டுச் சென்றார். மாலையில் வீடு திரும்பியதும் இரவு உணவை தயாரித்த அன்னு, குழந்தைகள் தூங்கியதும் அதுலின் உடலை இழுத்துச் சென்று வீட்டு வாசலில் போட்டுவிட்டுள்ளார். அடுத்த நாள் காலையில் கத்தி கூச்சலிட்டு, தனது கணவர் குடிபோதையில் கீழே விழுந்து உயிரிழந்துவிட்டார் என நாடகமாடியுள்ளார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அதுலின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மனைவி அன்னுவிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், கொலை குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.