fbpx

ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு ஒரு கிலோ ரூ.30-க்கு விற்பனை…! அமைச்சர் தகவல்

தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடைகளுக்குத் துவரம் பருப்பு போதுமான அளவு அனுப்பப்பட்டுள்ளது, தட்டுப்பாடு இல்லை. ராமதாஸ் அவர்களுக்கு, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பதிலறிக்கை.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக 2.25 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ. 30-க்கும் ஒரு லிட்டர் பாமாயில் ரூ. 25-க்கும் மானிய விலையில் வழங்கி வருகிறது. துவரம் பருப்பு விநியோகம் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் பாட்டாளி மக்கள் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்கள் சென்னை மாநகரில் உள்ள பெரும்பான்மையான நியாய விலைக் கடைகளில் நவம்பர் மாதத்திற்கான துவரம் பருப்பு இதுவரை வழங்கப்படவில்லை என்றும் சென்னையில் மட்டுமின்றி சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் நியாயவிலைக் கடைகளில் பருப்பு விநியோகிக்கப்படவில்லை என்றும் துவரம் பருப்பு விநியோகம் பற்றி முழுதும் அறியாமல் கூறியிருக்கிறார்.

நவம்பர்-2024 மாதத்தில் சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களுக்கும் 2,03,84,122 கிலோ துவரம் பருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டு நாளது தேதி வரை 1,62,83,486 கிலோ வழங்கப்பட்டு, நவம்பர் மாத ஆரம்ப இருப்பையும் (27,53,606 கிலோ) சேர்த்து 92% நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் 68.44.719 கிலோ துவரம் பருப்பு இருப்பு உள்ளது. அதுமட்டுமின்றி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்குகளில் 66,91,000 கிலோ துவரம் பருப்பு கையிருப்பு உள்ளது.

சென்னை மண்டலங்களைப் பொருத்தமட்டில் மொத்தமுள்ள 1794 கடைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 20.55.811 கிலோ துவரம் பருப்பில் 14.75,019 கிலோ வழங்கப்பட்டு நவம்பர் மாத ஆரம்ப இருப்பையும் (2,68,122 கிலோ) சேர்த்து 87% துவரம் பருப்பு நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. சென்னையைச் சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அவற்றிற்கான ஒதுக்கீட்டில் முறையே 96%, 94% மற்றும் 97% துவரம் பருப்பு நியாயவிலைக் கடைகளுக்குப் பொதுமக்களுக்கு விநியோகித்திட அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச்-2025 மாதம் வரை துவரம் பருப்பு மற்றும் பாமாயில் விநியோகம் சீராக நடைபெறுவதற்காக அந்த மூன்று மாதங்களின் தேவையான 6 கோடி கிலோ துவரம் பருப்பு மற்றும் 6 கோடி லிட்டர் பாமாயிலுக்கும் இன்று (22.11.2024) ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. ஆதலால், துவரம் பருப்பு விநியோகத்தில் எந்தவிதத் தட்டுப்பாடும் இல்லை. எதிர்காலத்திலும் தட்டுப்பாடுகள் ஏற்படாத வண்ணம் சீரிய முறையில் தொடர்ந்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இனிமேலாவது மருத்துவர் இராமதாஸ் அவர்கள் சரியாக விவரங்களைத் தெரிந்துகொண்டு அறிக்கை வெளியிட்டால் நல்லது என அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

English Summary

Duram dal is being sold at Rs. 30 per kg in ration shops

Vignesh

Next Post

உங்கள் வீட்டில் பல்லி, கரப்பான் பூச்சி தொல்லை அதிகமா இருக்கா?? அப்போ கண்டிப்பா இதை பண்ணுங்க...

Sat Nov 23 , 2024
ways-to-avoid-lizard-and-coackroaches

You May Like