காவல்துறை அனுமதி தராவிட்டாலும், பரந்தூரில் உள்ள அம்பேத்கர் திடலிலேயே மக்களை விஜய் சந்திக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் அமைகிறது. இதற்காக பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள 13 கிராமங்களில் இருந்து விளைநிலங்கள், நீர்நிலைகள் உட்பட 5,133 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதனால் பாதிக்கப்படும் மக்கள் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 908 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கட்சி தொடங்கிய நடிகர் விஜய் கடந்த அக்டோபர் 27-ம் தேதி அவர் நடத்திய முதல் மாநாட்டில், பரந்தூர் விமான நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்றவும் போராடும் மக்களுக்கு ஆதரவாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. போராட்டக் குழுவினரை சந்திக்க விஜய் முடிவு செய்தார். இதற்காக காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அக்கட்சியினர் மனு அளித்தனர். இதைத் தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் விஜய் வந்து செல்ல போலீஸார் அனுமதி அளித்துள்ளனர்.
கூட்டத்தை காலை 10 மணி முதல் 1 மணிக்குள் முடிக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. பிரச்சார கேரவன் வாகனத்தில் நின்றபடி மக்களிடம் பேசுவார் ஆகையால் அம்பேத்கர் தெருவில் தான் அனுமதி வழங்க வேண்டும் என தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்தன் கோரிக்கை வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், காவல்துறை அனுமதி தராவிட்டாலும், அம்பேத்கர் திடலிலேயே மக்களை விஜய் சந்திக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.