செல்போன் திருடனை பிடிப்பதற்காக சென்ற மும்பை காவல்துறையினர் திருடனுடன் இருந்த காவல்துறை அதிகாரியை கண்டு அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறார்கள்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் புறநகர் ரயிலில் நாள்தோறும் ஏராளமான செல்போன் காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், மும்பை கேர்வாடி காவல்துறையினர் ஒரு மொபைல் போன் திருடனை தீவிரமாக தேடிக் கொண்டிருந்தனர்.
அந்த திருடனின் பெயர் சபீர் அலி, மும்பை புறநகர் பகுதியில் இருக்கின்ற மும்ப்ரா என்ற பகுதியில் அவர் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே அந்த திருடனை கைது செய்ய உதவுமாறு அந்த பகுதி காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் கிருபாலியிடம் கேட்டுக் கொண்டனர்.
ஆனால், தான் விடுமுறையில் இருப்பதால், சில நாட்கள் பொறுத்திருக்குமாறு கேர்வாடி காவல் துறையினரிடம் கிருபாலி தெரிவித்துள்ளார். இதற்கு நடுவே, அந்த மொபைல் திருடன் சபீர் அலி அவ்வப்போது, பயன்படுத்தும் ஒரு மொபைல் நம்பர் கேர்வாடி காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது. உடனடியாக, அந்த மொபைல் போனை கண்காணித்து வந்தனர் காவல்துறையினர்.
மேலும், அந்த திருடன் யாரையெல்லாம் தொடர்பு கொள்கிறார்? என்ற விவரத்தை சேகரித்தனர். இரண்டு மாதத்தில், ஒரே நம்பரில் 100 முறைக்கு மேல் சபீர் அலி பேசியிருக்கிறார் என்பது தெரியவந்தது. ஆகவே அந்த போன் நம்பர் யாருடையது? என்று தேடிய காவல்துறையினர், அந்த நம்பர் போலீஸ் அதிகாரி கிருபாலிக்கு சொந்தமானது என்று கண்டுபிடித்துள்ளனர்.
அதன் பிறகு இருவரையும் காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். சில தினங்களுக்கு முன்னர், சபீர் அலி நள்ளிரவில் நவிமும்பையில் இருந்து, மும்பை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதை காவல் துறையினர் கண்காணித்துள்ளனர்.
ஆகவே அவரை காவல்துறையினர் பின் தொடர்ந்து சென்றனர். கோரேகாவ் ஆரே காலனி அருகே சென்று கொண்டிருந்தபோது, சபீர் அலி தன்னுடைய மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார். உடனடியாக கிருபாலியின் கைபேசி எங்கே இருக்கிறது? என்பதை கவனித்த போது, அவரும் அதே பகுதியில் தான் இருந்துள்ளார். அவர்கள் பவாய் பகுதியில் இருக்கின்ற ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கி இருப்பதை காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அங்கே கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, சபீர் அலியும், கிருபாலியும் உள்ளே செல்வது பதிவாகி இருந்தது. அவர்கள் இருவரும் காலை 6 மணிக்கு வெளியே வந்தனர். உடனடியாக காவல்துறையினர் சபீர் அலியை கைது செய்துள்ளனர்.
மேலும் அவரிடம் இருந்து 9 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றின் உரிமையாளர்களிடம் அவற்றை ஒப்படைக்க காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த சம்பவம் கடந்த எட்டாம் தேதி நடைபெற்றுள்ளது. இந்த சூழ்நிலையில் தான், கடந்த 22ஆம் தேதி மும்பையை சேர்ந்த சமூக சேவகர் ஒருவர், கிருபாலிக்கும், சபீர்அலிக்கும் தொடர்பு உள்ளதாகவும் அது தொடர்பாக விசாரிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். இதுவரையில் காவல்துறை அதிகாரியின் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுத்ததாக தகவல் கிடைக்கவில்லை. மேலும், அது தொடர்பாக விசாரிக்க, தனி அதிகாரியை தானே காவல்துறை ஆணையர் ஜெய்ஜீத் சிங் நியமனம் செய்துள்ளார்