காஞ்சிபுரம், ஈரோடு, தருமபுரி, சிவகங்கை, தேனி, கடலூர், நாகை, ராணிப்பேட்டை, கரூர் ஆகிய ஊர்களில் 72 கோடி ரூபாயில், 700 படுக்கைகளுடன் புதிய தோழி விடுதிகள் அமையும். அதுவும், 24 மணிநேரமும் பாதுகாவலர், பயோமெட்ரிக் நுழைவு முறை, வைஃபை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்று பல வசதிகளுடன் அந்த விடுதிகளை அமைக்க இருக்கிறோம் என சென்னையில் நடந்த உலக மகளிர் தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், உலக மகளிர் தினம் நேற்று சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் ; திராவிட இயக்கத்தின் அடிப்படை நோக்கமே ரத்த பேதம் இல்லை, பால் பேதம் இல்லை என்பதுதான். அதுவே முழுமையான சமூக நீதி. திராவிட இயக்கத்தை உருவாக்கிய பெரியார், வாழ்நாளெல்லாம் பெண் விடுதலைக்காக உழைத்தார். திராவிட இயக்க ஆட்சிக் காலங்களில் பெண்களுக்கு உரிமைகள் மீட்டுத் தரப்பட்டது.
வேலை செய்யும் பெண்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு நாம் தொடங்கிய தோழி விடுதிகளுக்கு பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் மூலமாக நான் அறிவிக்க விரும்புவது, புதிதாக காஞ்சிபுரம், ஈரோடு, தருமபுரி, சிவகங்கை, தேனி, கடலூர், நாகை, ராணிப்பேட்டை, கரூர் ஆகிய ஊர்களில் 72 கோடி ரூபாயில், 700 படுக்கைகளுடன் புதிய தோழி விடுதிகள் அமையும். அதுவும், 24 மணிநேரமும் பாதுகாவலர், பயோமெட்ரிக் நுழைவு முறை, வைஃபை வசதி, R.O. முறையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்று பல வசதிகளுடன் அதை அமைக்க இருக்கிறோம்.
சென்னை மாநகரத்தில், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்கின்ற விதமாகவும், பெண்களுக்கு சுய வேலைவாய்ப்பை உருவாக்குகின்ற விதமாகவும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், தலா ஒரு லட்சம் ரூபாய் அரசு மானியத்துடன் 250 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பிங்க் நிற ஆட்டோக்களை வழங்கி இருக்கிறோம். இதில், காவல்துறை உதவி எண்களுடன் இணைக்கப்பட்ட GPS கருவியும் பொருத்தப்பட்டிருக்கிறது என்றார்.