முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்ற வழக்கு தொடர ஆளுநர் ஆர்.என். ரவி அனுமதி.
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி மீது அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றியதாக 3 மோசடி வழக்குகளை சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்குகளின் அடிப்படையில் அவர் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்தாண்டு ஜூன் மாதம் கைது செய்தனர். இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரிய மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த வாரம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆளுநர் செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடர அனுமதி வழங்கவில்லை என்று வாதிட்டனர். தற்பொழுது வழக்கு தொடர ஆளுநர் மாளிகை அனுமதி கொடுத்துள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்ற வழக்கு தொடர ஆளுநர் ஆர்.என். ரவி அனுமதி வழங்கி உள்ளார்.