பொதுமக்களின் அடிப்படைத் தேவையான சுத்தமான குடிநீரைக் கூட வழங்க முடியாத கையாலாகாத மாடல் திமுக அரசு என அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட, உறையூர் மின்னப்பன்தெரு, பனிக்கன்தெரு, காமாட்சி அம்மன் தெரு, நெசவாளர் தெரு, காளையன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தி.மு.க வார்டு கவுன்சிலரிடம் பலமுறை புகாரளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. கழிவுநீர் கலந்த குடிநீரால் உறையூரில் மூன்றரை வயது குழந்தை உட்பட மூன்று பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், குற்றங்களை மூடி மறைக்கும் திமுக அரசின் போக்கு இப்போதும் தொடர்கிறது என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்; திருச்சி மாநகராட்சி உறையூரில், மாநகராட்சி சார்பாக விநியோகிக்கப்படும் குடிநீரில் கழிவு நீர் கலந்ததால், நான்கு வயது பெண் குழந்தை உட்பட மூன்று உயிர்கள் பலியாகியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிகிறது. குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக, கடந்த சில நாட்களாகவே பொதுமக்கள் புகாரளித்த நிலையில், மாமன்ற உறுப்பினர், மாநகராட்சி அதிகாரிகள் உட்பட யாருமே நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், குற்றங்களை மூடி மறைக்கும் திமுக அரசின் போக்கு இப்போதும் தொடர்கிறது. சென்னை பல்லாவரத்திலும், இது போலவே குடிநீரில் கழிவு நீர் கலந்ததால் மூன்று உயிர்கள் பறிபோயின. அப்போதும் குடிநீரில் கழிவு நீர் கலக்கவில்லை என்று கூறிய திமுக அரசு, அதற்கான பரிசோதனை அறிக்கையை வெளியிடாமல் ஓடி ஒளிந்து கொண்டது. தற்போதும் அதே கதையை முன்வைக்கிறது. பொதுமக்கள் உயிர் என்ன உங்களுக்கு அத்தனை மலிவாகி விட்டதா?
பொதுமக்களின் அடிப்படைத் தேவையான சுத்தமான குடிநீரைக் கூட வழங்க முடியாத கையாலாகாத மாடல் திமுக அரசு, பொய்களைக் கூறி சமாளிப்பதை விட்டுவிட்டு, உடனடியாக உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தகுந்த சிகிச்சை வழங்கப்பட வேண்டும். அந்தப் பகுதியில் உடனடியாக மருத்துவ முகாம்கள் அமைத்து, பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் இது போன்ற துயர சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க, போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.