போரூரை அடுத்த ஆலப்பாக்கத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (30). இவரது மனைவி விமலா (27). இருவரும் பொறியாளர்கள். இவர்களுக்கு மூன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது.
கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கணவருடன் கோபித்துக் கொண்ட விமலா கடந்த 10 நாட்களுக்கு முன்பு தாய் வீட்டுக்கு சென்று விட்டார். தற்போது, சபரிமலைக்கு மாலை அணிவித்துள்ள கார்த்திக், நேற்று மாமியார் வீட்டிற்கு சென்று, மனைவியை தன்னுடன் வாழ வருமாறு அழைத்துள்ளார்.
ஆனால், விமலா வர மறுத்ததால், கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் வீட்டை விட்டு வெளியேறி தெருவில் நின்று மனைவியை வாய்க்கு வந்தபடி திட்டிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
இதை அக்கம் பக்கத்தினர் பார்த்த நிலையில், விரக்தியில் விமலா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து உறவினர்கள் விமலாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
விமலாவை தற்கொலைக்கு தூண்டியதாக கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர். திருமணம் நடந்து மூன்றரை ஆண்டுகள் ஆவதால், ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.