சென்னையில் வளர்ப்பு நாய்களை பொது இடத்துக்கு அழைத்து வரும்போது வாய்மூடி அணிவிக்காவிட்டால் ரூ.1000 அபராதம்.
செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய்கள் பொதுமக்களை கடித்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழகம் முழுவதும் விதிக்கப்பட்டது. குறிப்பாக தமிழகத்தில், 23 இனங்களை சேர்ந்த நாய்களை வளர்க்க அரசு தடை விதித்துள்ளது. உரிமம் பெறாமல் நாய் வளர்த்தால், உரிமையாளருக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கவும் உத்தரவும் வெளியானது.
மேலும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும், வளர்ப்பு நாய்கள் கடித்தால் அதன் உரிமையாளரே பொறுப்பு இது போன்ற பல விதிமுறைகளை கடந்த ஆண்டு அறிவித்திருந்தது. ஆனால் இந்த உத்தரவுகளை கடைப்பிடிக்காத நிலை நீடித்து வந்தது. இந்த நிலையில் நாய் வளர்ப்பவர்கள் தங்களது நாய்களை சாலையில் அழைத்து செல்லும் போது, நாய்களுக்கு வாய் மூடி கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பொது இடங்களுக்கு நாய்களை அழைத்து செல்லும் போது அதற்கு உரிய வகையில் கட்டாயம் வாய் கவசம் அணிவிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி வலியுறுத்தியுள்ளது. இதனை பின்பற்றாவிட்டால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.