பள்ளிக் கல்வித் துறையில் 28,030 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உள்பட 47,000 தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரமாக்கப்பட்டுள்ளன.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அரசாணையில்; பள்ளிக் கல்வித் துறையில் முதன்மை கல்வி அலுவலர், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், சட்ட அலுவலர் உள்பட 55 வகையான பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தற்காலிகமாக பணியாற்றும் பணியாளர்களை நிரந்தரம் செய்வது தொடா்பாக பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் கூட்டம் கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்தது. இந்தக் கூட்டத்தில், தற்காலிகமாக இருக்கக் கூடிய 52,578 பணியிடங்களில் 47,013 இடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றலாம் என முடிவு செய்யப்பட்டது.
மேலும், ஆசிரியர் மற்றும் பல்வேறு ஆசிரியா் அல்லாத 5,418 தற்காலிக பணியிடங்களில் பணியாற்றுவோர் ஓய்வு பெற்றவுடன், அந்தப் பணியிடங்கள் ரத்து செய்யவும் முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவுகளை ஏற்று உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டுமென பள்ளிக் கல்வி இயக்குநர் சாா்பில் அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை ஏற்று, ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத 47,013 தற்காலிக பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றப்படும். இதேபோன்று 5,418 பணியிடங்களில் ஊழியா்கள் ஓய்வு பெற்ற பிறகு ரத்தாகும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.