பழங்குடியினர் நலத்துறை பள்ளி மற்றும் விடுதி மாணவர்களுக்கான உணவு கட்டண ஒதுக்கீடு முறைகேடு நடைபெறுவதாக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற கழகம் சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் தனது கடிதத்தில்; தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 300 க்கும் மேற்பட்ட பள்ளிகளும் சுமார் 45 க்கும் மேற்பட்ட விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன . மேற்படி பள்ளி மற்றும் விடுதிகளில் பெரும்பாலும் பழங்குடி இனத்தை சேர்ந்த சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். அவர்களுக்கான உணவு மற்றும் இதர செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீடு அரசால் குறித்த காலத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டும் பழங்குடியினர் நல இயக்குனர் அலுவலகத்தில் இருந்து நடப்பு கல்வி ஆண்டில் இதுவரை ஒதுக்கீடு செய்யப்படவில்லை.பெரும்பாலான பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் விடுதி காப்பாளர்கள் தங்களின் சொந்த செலவில் கடந்த 5 மாதங்களாக விடுதி மாணவர்களுக்கான கட்டணத்தை செலவிட்டு வருகின்றனர்.
பழங்குடியினர் நல இயக்குனர் அலுவலகத்தில் முற்றும் முதலுமாக இருந்து செயல்பட்டு வரும் உதவி இயக்குனர் அவர்களிடம் இது குறித்து கேட்கிறபோது நிதி ஒதுக்கி ஆகிவிட்டது,வந்து சேர்ந்து விட்டது என்பதாக பதில் சொல்லுகிறார். ஆனால் இதுவரை பணம் வந்தபாடில்லை. இதுபோன்ற உணவு கட்டண முறைகேடுகள் நடந்து வருவது அதிகாரிகள் மாறினாலும் அதன் நீட்சி இதுவரை குறையவில்லை. குறிப்பாக தலைமையகத்தில் பணி செய்யக்கூடிய சார்நிலை அலுவலர்கள் மாவட்டங்களில் தனிப்பட்ட முறையில் ஏஜென்டுகளை நியமித்து கொண்டு அவர்கள் மூலம் வரிவசூல் போல கையூட்டு வாங்கி கொண்டு இந்த மாதிரியான முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் கள்ளக்குறிச்சி,வேலூர், திருவண்ணாமலை, போன்ற மாவட்டங்களில் கடந்த 2016-2017 நிதியாண்டில் ஆசிரியர்களால் செலவு செய்யப்பட்ட சுமார் 50 லட்ச ரூபாய்க்கு மேற்பட்ட தொகை இதுவரை கொடுக்கப்படாமல் அவர்கள் பெரும் கடன் தொல்லையில் இருந்து வருகிறார்கள் .
திருவண்ணாமலை மாவட்டத்தில் உணவு கட்டணத்தில் நடந்த சுமார் 50 கோடி ரூபாய் ஊழல் முறைகேடு ஆதாரப்பூர்வமாக கண்டுபிடிக்கப்பட்டும் மாவட்ட மற்றும் மாநில நிர்வாகத்தால் இதுவரை பொத்தி பாதுகாக்கப்படுகிறது.மேலும் இத்துறையில் கடந்த சில ஆண்டுகளாகவே ஆசிரியர்களின் பணி இடமாறுதல்,பதவி உயர்வு மற்றும் துறை மாறுதல் போன்ற நடவடிக்கைகளில் பெரும் முறைகேடு நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.