வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காததால் ஓட்டலுக்கு சாப்பிட்ட சென்ற நபர் காரில் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியை சேர்ந்தவர் ஹர்ஷவர்த்தன் (30). இவர், மதுரவாயலில் உறவினர் மீனாட்சி சுந்தரம் என்பவர் வீட்டில் கடந்த இரண்டு மாதங்களாக தங்கியுள்ளார். இந்நிலையில், நேற்று இருவரும் ஒரு ஓட்டலில் சாப்பிட்டனர். பின்னர் வெளியே வந்தபோது 9 பேர் கொண்ட கும்பல், திடீரென பாய்ந்து வந்து ஹர்ஷவர்த்தனை அலேக்காக காரில் தூக்கிச் சென்றனர். மேலும், அந்த கும்பல் மீனாட்சி சுந்தரத்திடம் கடுமையாக எச்சரிக்கை விடுத்ததுடன் ‘போலீசுக்கு தகவல் தெரிவித்தால் கொலை செய்து விடுவோம்’ என்று மிரட்டி விட்டுச் சென்றுள்ளனர்.
இருப்பினும் இதுகுறித்து அவர், மதுரவாயல் போலீசில் புகார் அளித்தார். முதற்கட்ட விசாரணையில், ‘ஹர்ஷவர்த்தன் அவரது சொந்த ஊரில் சுயமாக தொழில் செய்து வந்துள்ளார். மேலும், ஷேர் மார்க்கெட்டிலும் முதலீடு செய்திருக்கிறார். சொந்த தொழிலிலும், ஷேர் மார்க்கெட்டிலும் கடுமையான நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்காக அப்பகுதியை சேர்ந்த சிலரிடம் கடன் வாங்கியுள்ளார். பின்னர், கடனை அவரால் திருப்பிச் செலுத்த முடியவில்லை. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பிக் கேட்டு நெருக்கடி கொடுத்து வந்தனர்.
இதனால், அவர்களுக்கு பயந்து மதுரவாயலில் உள்ள அவரது தாய்மாமா மீனாட்சி சுந்தரம் வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில் தான், ஓட்டலுக்கு சென்றபோது திருநெல்வேலியை சேர்ந்த ரகு உள்ளிட்ட 9 பேர் ஹர்ஷவர்த்தனை காரில் கடத்தி சென்றுள்ளனர். ஹர்ஷவர்த்தன் வாங்கிய கடனை திருப்பி கொடுக்காத ஆத்திரத்தில் இந்த சம்பவத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருவதுடன் ஹர்ஷவர்த்தனை கடத்திய கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.
Read More : காதலியை கரம்பிடிக்கிறார் விஜய் மல்லையாவின் மகன்..!! லண்டனில் பிரம்மாண்ட திருமணம்..!!