கேரளா அரசு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி கே.வாசுகி என்பவரை வெளியுறவு செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது உள்ளது.
கேரளாவின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலாளராக உள்ள கே.வாசுகி, வெளியுறவு விவகாரங்கள் துறையை கூடுதலாக கவனிப்பார் என்று மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வெளியுறவு விவகாரம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், கேரள முதலமைச்சர் பினராய் விஜயனின் இந்த நியமனம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
வெளியுறவுத்துறை, பாதுகாப்பு துறை , விமான போக்குவரத்து, பெட்ரோலியம், துறைமுகம் உள்ளிட்டவை மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும். இதில் எந்த மாநில அரசும் தலையிட முடியாது. இப்படியிருக்க முதல் முறையாக மாநிலம் ஒன்றுக்கு வெளியுறவு செயலாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.
மேலும் இந்த விவகாரத்தில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை வாசுகிக்கு பொது நிர்வாக துறை உதவும். மேலும் டெல்லியில் உள்ள மத்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களுடன் வாசுகி தொடர்பு கொள்வதற்கு டெல்லி கேரள இல்லத்தின் ஆணையர் உதவ வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் கே. சுரேந்திரன்; இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்திற்கு வெளி விவகாரங்களில் தலையிட எந்த அதிகாரமும் இல்லை. இது, அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான நடவடிக்கை. ஆபத்தான முன்னுதாரணம் ஆகும். கேரளாவை தனி நாடாக அமைக்க முதலமைச்சர் பினராயி விஜயன் முயற்சி செய்கிறாரா…? என கே. சுரேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.