அதிமுகவில் ஜெயலலிதாவின் வழக்கறிஞராக இருந்த ஜோதி முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். 2008இல் திமுகவில் இணைந்த ஜோதி, சிறிது காலத்திற்கு பின்னர் விலகி மீண்டும் திமுகவில் இணைந்துள்ளார்.
கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தவர் ஜோதி. ஜெயலலிதா மற்றும் சசிகலா உள்ளிட்டோரின் வழக்குகளை இவர்தான் பார்த்துக் கொண்டிருந்தார். இவருடைய திறமையை மதித்து, ஜெயலலிதா ராஜ்யசபா எம்.பியாகவும் ஜோதியை ஆக்கினார். 2008-ம் ஆண்டு அதிமுகவில் இருந்து விலகி அன்றைய முதல்வர் கருணாநிதியை சந்தித்து திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அதன் பிறகு சிறிது காலம் திமுகவில் பயணித்த அவர் மீண்டும் அகட்சியிலிருந்து விலகினார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு திமுகவையும், 2ஜி வழக்குகள் குறித்தும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்த பொழுது அதற்கு திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா எதிர் விமர்சனம் வைத்திருந்தார். ஜெயலலிதா மீதான தீர்ப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி நேரடியாக என்னுடன் விவாதிக்க தயாரா என ஆ.ராசா கேள்வி எழுப்பி இருந்தார். அப்பொழுது அதிமுகவின் வழக்கறிஞர் ஜோதி, ‘அது குறித்து விவாதிக்க தான் தாயார் என ஆ.ராசாவுக்கு சவால் விட்டிருந்தார். இந்த நிலையில் அதிமுகவில் ஜெயலலிதாவின் வழக்கறிஞராக இருந்த ஜோதி முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார்.