லிப்-லாக் சேலஞ்ச் என்ற போட்டி ஏற்பாடு செய்த 8 மாணவர்கள் மீது கர்நாடக போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள தனியார் குடியிருப்பில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நண்பர்கள் முன்னிலையில் ஒரு இளைஞர் பள்ளி மாணவிக்கு முத்தமிடும் வீடியோ வைரலானதை அடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து பேசிய போலீசார், மாணவர்கள் இரண்டு மாதங்களுக்கு ஒரு குடியிருப்பை வாடகைக்கு எடுத்ததாக தெரிவித்தனர். அவர்கள் தங்கள் தோழிகளை அழைத்துச் சென்று truth-and-dare விளையாட்டை விளையாடியதாகவும், அப்போது அவர்கள் லிப்-லாக் போட்டியும் விளையாடினர் என்று போலீசார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக வைரலாகி வரும் வீடியோவில், ஒரு கல்லூரி மாணவனும், இளம் பெண்ணும் முத்தமிடும் போது, அவர்களைச் சுற்றியுள்ளவர்கள் சத்தமாக உற்சாகப்படுத்துகிறார்கள். லிப்-லாக் போட்டியின் ஒரு பகுதியாக இந்த செயல் நடந்ததாக மங்களூரு போலீசார் தெரிவித்தனர்.
அந்தக் குழுவில் இருந்த ஒரு இளைஞர், வாட்ஸ்அப்பில் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.. பின்னர் அந்த வீடியோ விவகாரம், அவர்களின் பள்ளியின் கவனத்திற்கு வந்தது. சில மாணவர்கள் பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட சில மாணவர்கள் பிரபலமான கல்லூரியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்துள்ளனர். மேலும் மாணவிகள் போதைப்பொருள் உட்கொண்டார்களா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாண்டேஸ்வரா மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வாட்ஸ்அப்பில் வீடியோவை பதிவேற்றிய இளைஞர் உட்பட 4 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் வெளிநாடு சென்றுள்ளதாக தெரிகிறது.. சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.. இந்த வீடியோ பெற்றோர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.