பண்ணாரி மாரியம்மன் குண்டம் திருவிழாவை முன்னிட்டு இன்று ஈரோடு மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக் குறிப்பில்; ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு இன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. கல்லூரி, பள்ளிகளில் தேர்வுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தால், இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது. தேர்வுகள் முன்கூட்டி அறிவித்தபடி நடைபெறும். வங்கிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது.
இந்த விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வரும் 26- ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. உள்ளுர் விடுமுறை நாளான இன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு ஈரோடு மாவட்டத்திலுள்ள கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.