மத்திய சுரங்க அமைச்சகம் ஏலம்விட முடியும். ஆனால், சுரங்க குத்தகையை மாநில அரசு தான் வழங்க வேண்டும். நில விவகாரங்களில் மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை என டங்ஸ்டன் ஏலம் தொடர்பாக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட செய்தி குறிப்பில்; கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி மத்திய சுரங்கத் துறை அமைச்சருக்கு நான் எழுதிய கடிதத்தில், சுரங்க அமைச்சகத்தின் ஏலம் விடும் நடைமுறையில் தவறு இருப்பதை சுட்டிக்காட்டி, அது மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சினைக்குத்தான் வழிவகுக்கும். அதை மாநில அரசுதான் கையாள வேண்டியிருக்கும் என்று வெளிப்படையாகவே கூறியிருந்தேன்.
புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையரின் கடிதத்தில், நாயக்கர்பட்டி டங்ஸ்டன் பிளாக், அரிட்டாப்பட்டியின் உயிர் பன்முகத்தன்மை பாரம்பரிய தளத்தை உள்ளடக்கியதாக உள்ளது என்று சுரங்கத்துறை அமைச்சகத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளதே தவிர, அதில் நில விவரங்கள் எதுவும் அளிக்கப்படவில்லை. இருப்பினும் கனிமத் தொகுதியில் உயிர் பன்முகத்தன்மை பாரம்பரிய தளம் இருப்பதை நன்கு அறிந்த பிறகும் சுரங்க அமைச்சகம் ஏலத்தில் இறங்கியுள்ளது.
நாங்கள் ஏல அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன் என்றால், தற்போதைய மத்திய அரசின் செயல்பாடுகளை அறிந்த எவருக்கும் இது ஒரு வீண் நடவடிக்கை என்பது தெரியும். சுரங்க குத்தகையை மாநில அரசுதான் வழங்க வேண்டும் என்பதால், சுரங்க அமைச்சகத்துடன் பயனற்ற தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட விரும்பவில்லை. தற்போது சுரங்க அமைச்சகமும் ஏலம்விட முடியும் என்றாலும், சுரங்கத்துக்கான குத்தகையை மாநில அரசுதான் வழங்க வேண்டும் என்று அந்த அமைச்சகமே ஒப்புக்கொண்டுள்ளது. நில விவகாரங்களில் மத்திய அரசு தலையிடும் அதிகாரம் இல்லை. சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளை மாநில அரசு மட்டுமே நிர்வகிக்க வேண்டிய நிலையில், மாநில அரசுக்கு மட்டுமே வருவாய் வந்து சேரும் எனும்போது, மாநில அரசின் எதிர்ப்பை மீறி மத்திய அரசு ஏலத்தில் இறங்கியது ஏன் என்று தெரியவில்லை.
இந்தப் பிரச்சினை குறித்து பிரதமரின் கவனத்துக்கு முதல்வர் கொண்டு சென்ற பிறகு தான், சுரங்கத் துறை அமைச்சகம் மறு ஆய்வு செய்ய முடிவு செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இருப்பினும், ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டு ஹிந்துஸ்தான் ஜின் நிறுவனத்துக்கு கனிமவளத் தொகுதி வழங்குவதை அமைச்சகம் ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.