Court: இந்துக்களுக்கிடையிலான திருமணம் புனிதமானது; அதை ஒரே வருடத்தில் கலைக்க முடியாது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் நிஷாந்த் பரத்வாஜ், ரிஷிகா கௌதம் என்ற தம்பதி, இந்து திருமணச் சட்டம் 1955 (HMA 1995), பிரிவு 13-Bன் கீழ் பரஸ்பர விவாகரத்து கோரி, சஹாரன்பூர் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். `திருமணமான ஓர் ஆண்டுகள் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்யக் கூடாது ‘ என்று கூறி, இதே சட்டத்தின் பிரிவு 14 கூறுவதன் அடிப்படையில், மனு நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து நிஷாந்த் பரத்வாஜ் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதனை விசாரித்த நீதிபதிகள் அஸ்வனி குமார் மிஸ்ரா, டோனாடி ரமேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு, விவாகரத்துக்கு குறைந்தபட்சம் திருமணமான தேதியிலிருந்து ஒரு வருடம் ஆகியிருக்க வேண்டும் என்று HMA 1995 பிரிவு 14 கூறினாலும், விதிவிலக்கான காரணங்கள் இருந்தால் மனுவை விசாரணைக்கு ஏற்கலாம். அதே பிரிவு வழங்கும் விதிவிலக்குக்கான காரணங்கள் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினர்.
இருப்பினும், இந்த வழக்கில் பரஸ்பரமாக விவாகரத்து கோருவதைத் தவிர, மனுவை ஏற்றுக்கொள்வதற்கான விதிவிலக்கான காரணங்கள் இல்லை கூறி, மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். திருமணமான தேதியிலிருந்து ஓராண்டு கடந்த பிறகு புதிய விவாகரத்து மனுவை தாக்கல் செய்யலாம் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், “இரண்டு இந்துக்களுக்கிடையிலான திருமணம் புனிதமானது. ஒரே ஆண்டில் கலைக்க முடியாது. சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட காரணங்களுக்காக மட்டுமே அது கலைக்கப்படும்” என்று கருத்து தெரிவித்தனர்.