சென்னை அருகில் உள்ள மண்ணிவாக்கம் பகுதியில் மெடிக்கல் கடை உரிமையாளர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
சென்னை வண்டலூரை அடுத்துள்ள மண்ணிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (45). இவர் ஓட்டேரி பகுதியில் மெடிக்கல் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் தனது கடையை அடைத்து விட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது இவரை வழிமறித்த நான்கு பேர் கொண்ட கும்பல் கொடூரமாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடியது.
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த விஜயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். சில வருடங்களுக்கு முன் பிரபல ரவுடியான சிலம்பரசன் என்பவர் விஜயகுமாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது .
இது தொடர்பான புகாரில் சிலம்பரசன் சிறையில் இருந்து வருகிறார். அதனால் அவரது ஆதரவாளர்கள் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது. மேலும் வேறு ஏதேனும் காரணங்களுக்காக இந்த கொலை நடந்திருக்குமா.? என்ற கோணத்திலும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.