அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் புலன் விசாரணை அதிகாரிகளை மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு திருச்சியில் நடைபயிற்சி மேற்கொண்டபோது கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்த நிலையில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி ராமஜெயத்தின் மனைவி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதன்பேரில் இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், சிபிஐ அதிகாரிகளின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதால், இந்த வழக்கை தமிழக அரசின் காவல் துறை அதிகாரிகளே விசாரிக்க உத்தரவிட வேண்டும், எனக் கோரி ராமஜெயத்தின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், சிபிசிஐடி டிஜிபி-யின் கண்காணிப்பில் தூத்துக்குடி எஸ்.பி.யாக இருந்த ஜெயக்குமார் உள்ளிட்டோர் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் புலன் விசாரணை அதிகாரிகளை மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கின் விசாரணையை சிபிஐ வசம் இருந்து மாநில காவல்துறைக்கு மாற்ற உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை அடுத்து 2022ம் ஆண்டு காவல்துறை சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், கொலை வழக்கு விசாரணையில் முன்னேற்றம் இருப்பதாக தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் வாதம். சிறப்பு புலனாய்வுக் குழுவில் இருந்த ஜெயக்குமார் கடலூர் எஸ்.பி. ஆக மாற்றப்பட்டதால் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து ஜெயக்குமாருக்கு பதிலாக திருச்சி சரக டி.ஐ.ஜி., தஞ்சை எஸ்.பி. ஆகியோரை சிறப்பு புலனாய்வுக் குழுவில் கூடுதலாக நியமித்து புலன் விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.