9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்குவதற்கான என்எம்எம்எஸ் தேர்வுக்குரிய முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளதாக தேர்வுத் துறை அறிவித்துள்ளது. தேர்வெழுதிய மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான 2024-25ம் ஆண்டிற்கான என்.எம்.எம்.எஸ் தேர்வு கடந்த பிப்ரவரி 22ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வின் முடிவுகள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம். மாணவர்கள் தங்களுடைய பதிவெண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தங்களுடைய மதிப்பெண்களை இன்று பிற்பகல் அறிந்து கொள்ளலாம். இந்த ஊக்கத்தொகைப் பெற தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியலும் இந்த இணையதளத்திலேயே வெளியிடப்படும்.
இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகையாக வழங்கப்படும். இத்தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், 8-ம் வகுப்பு படித்து முடித்த மாணவர்கள் தகுதியானவர்கள். மேலும் இந்தத் தேர்வில் பங்கேற்க, மாணவரின் பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு ரூ.1.5 லட்சம் இருப்பதுடன், 7-ம் வகுப்பின் முழு ஆண்டு தேர்வில், 55 சதவீத மதிப்பெண்களுக்கு மேலும், ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள், 50 சதவீதமும் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.