மகாராஷ்டிரா மாநிலத்தில் தனது 68 வயது தந்தையை தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தின் டோம்பிவாலி பகுதியைச் சார்ந்த தேஜாஸ் சிண்டே என்ற 21 வயது இளைஞர் 68 வயதான தனது தந்தையை கொடூரமாக கொலை செய்திருக்கிறார். கல்லூரி மாணவரான இவர் தனது தாய் மற்றும் தந்தையுடன் வசித்து வந்திருக்கிறார். இவரது தந்தையான ஷியாம் சுந்தர் சிண்டே ஒரு தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்துள்ளார். வயது முதிர்ச்சியின் காரணமாக நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஷியாம் சுந்தர் மகன் தேஜாஸ் சிண்டேயை அடிக்கடி தொந்தரவு செய்து வந்ததாக தெரிகிறது.
இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது தாய் வெளியே சென்று இருந்த நேரத்தில் மகனுக்கும் தந்தைக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கோபமடைந்த தேஜாஸ் சிண்டே கல்லை எடுத்து தனது தந்தையின் தலையில் கொடூரமாக தாக்கி இருக்கிறார். மேலும் கத்தியை எடுத்து அவரது குரல் வலையை அறுத்து கொலை செய்துள்ளார். அதன் பிறகு திலக் நகர் காவல் நிலையத்திற்கு போன் செய்து தனது தந்தையை தான் கொலை செய்து விட்டதாக தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை ஷியாம் சுந்தர் சிண்டேயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவரது மகன் தேஜாஸ் சிண்டேயை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.