விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சாலையில் அமைந்துள்ள நேமூர் கிராம பகுதியில் மேற்கொண்ட கள ஆய்வின்போது அங்கு துர்க்கை என்ற பெயரால் மக்கள் தற்போது வணங்கும் பல்லவ பேரரசின் காலத்தில் வடிக்கப்பட்ட கொற்றவை சிற்பம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த சிற்பம் குறித்து கள ஆய்வில் ஈடுபட்ட ழுப்புரம் மாவட்ட வரலாறு மற்றும் பண்பாட்டுப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் கோ.செங்குட்டுவன், திருவாமாத்தூர் கண.சரவணக்குமார் ஆகியோர் கூறியதாவது:- துர்க்கை என்ற பெயரால் மக்கள் தற்போது வணங்கும் கொற்றவை வழிபாடு தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு இருந்து வருவதாகும். அரசர்கள் தங்களது படையெடுப்புக்கு முன்பும், போரில் வெற்றியடைந்த பின்பும் வணங்கும் தெய்வமாக கொற்றவை இருந்து வந்தாள்.
பல்வேறு இடங்களில் இன்று படைவீட்டம்மன் என்ற பெயரால் வணங்கப்படும் தெய்வமும் கொற்றவையே. இதற்கான வரலாற்று ஆதாரங்கள் நிறைய உள்ளது. சென்னையில் தற்போது பாடி என்று அழைக்கப்படும் ஊரின் முழுப் பெயர் படை வீடு என்பதாகும். படை வீடு என்றால் போருக்கு தேவையான வீரர்கள் மற்றும் போர் கருவிகளை தயார் செய்யவும், போர் பயிற்சி பெறவும் தேர்ந்தெடுக்கப்படும் இடமாகும். மேலும் போருக்கு புறப்படும் முன்பாக அங்கு கொற்றவை சிலையை நிர்மாணித்து வணங்கி, நரபலி கொடுத்த பின்பே படைகள் புறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
கொற்றவை குறித்து நம் பழந்தமிழ் இலக்கியங்களில் பலேறு இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வெற்றி தேவதைக்கு கானமர் செல்வி, காடுறை கடவுள், பெருங்காற்றுக் கொற்றி, கொற்றவை எனும் பெயர்கள் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக சிலப்பதிகாரத்தில் கொற்றவையின் உருவத்தை குறித்து இளங்கோவடிகள் அதிகம் குறிப்பிட்டுள்ளார். பாய்கலப் பாவை என்ற ஒரு பெயரை சிலப்பதிகாரத்தில் இளங்கோ குறிப்பிட்டுள்ளார். இதற்கு பாய்ந்து வரும் மானை வாகனமாக கொண்டவள் என்பது பொருளாகும்.
இங்கு கிடைத்துள்ள கொற்றவை சிற்பம் கி.பி. 9 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது ஆகும். சுமார் 6 அடி உயரமுள்ள பலகைக்கல்லில் இந்த சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. 8 கரங்களுடன் காட்சியளிக்கும் கொற்றவை, ஒவ்வொரு கரத்திலும் ஒவ்வொரு வகையான ஆயுதத்தை ஏந்தி, எருமைத்தலையின் மீது கால் வைது நிற்பது போல வடிக்கப்பட்டுள்ளது. கொற்றவை சிலையின் இடது பக்கமாக மான் சிலை இருப்பது, சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள பாய்கலப் பாவையை நினைவூட்டுகிறது. நேமூர் ஏரி பகுதியில் தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்டால் மேலும் பல சிறபங்கள் கிடைக்கக்கூடும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.