கடலூர் முதுநகர் அருகே உள்ள பச்சையாங்குப்பத்தை சேர்ந்த சபரிநாதன் (30) என்பவரும், அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (38) என்பவருடன் சொந்த வேலைக்காக நேற்று மாலை குள்ளஞ்சாவடி சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து இருவரும் மீண்டும் இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். இரவு 7 மணி அளவில் கடலூர் அடுத்த பெரியகாட்டுசாகை என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த அதே சமயத்தில் கடலூரில் இருந்து 30 பயணிகளுடன் விருத்தாசலம் நோக்கி தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.
அந்த பஸ் பெரியகாட்டுசாகை அருகில் வந்த போது திடீரென டயர் வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து தறிகெட்டு ஓடி சபரிநாதன் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதி, அங்குள்ள துணைமின் நிலையம் அருகில் இருந்த மின்மாற்றி மீது மோதியபடி நின்றது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சபரிநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். செந்தில்குமார் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இதற்கிடையே மின்மாற்றி மீது மோதிய பஸ் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதில் கொழுந்து விட்டு எரிந்த தீ, பஸ் முழுவதும் மளமளவென பரவ தொடங்கியது. உடனே பஸ்சில் இருந்த டிரைவர் மற்றும் பயணிகள் அலறியடித்துக் கொண்டு பஸ்சில் இருந்து இறங்கி ஓடினர். இதுபற்றி தகவல் அறிந்த குள்ளஞ்சாவடி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு முழுவதுமாக தீயயை அனைத்தனர். படுகாயமடைந்த செந்தில்குமாரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த தீ விபத்தால் கடலூர்-விருத்தாசலம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையே விபத்தில் காயமடைந்து கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட செந்தில்குமாரும் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து குள்ளஞ்சாவடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இருசக்கர வாகனத்தின் மீது மோதி பஸ் தீப்பிடித்து எரிந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.