திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள தும்பலம் கேனி பள்ளம்காட்டுகொட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பண்ணன். இவர் தன்னுடைய மகன்கள் அண்ணாவி (62), முருகேசன் (48), பெரியசாமி(45) உள்ளிட்ட மூவருக்கும் சொத்துக்களை பிரித்துக் கொடுக்க முடிவெடுத்தார்.
அப்போது முருகேசனுக்கு விவசாய நிலத்தையும், மற்ற இருவருக்கும் நிலத்திற்கு பதிலாக பணத்தையும் கொடுத்து பாகப்பிரிவினை செய்தார். ஆனால் இதில் அண்ணாவி மற்றும் பெரியசாமி உள்ளிட்டோருக்கு உடன்பாடு இல்லை என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, மற்ற இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இத்தகைய சூழ்நிலையில், கடந்த 7/1/2018 அன்றைய தினம் தன்னுடைய நிலத்தில் விவசாய பணிகளை கவனித்துக் கொண்டிருந்த முருகேசன் இடம் அங்கு வந்து பெரியசாமி மற்றும் அண்ணாவி மேலும் அவருடைய மகன் சத்யராஜ்( 29) உள்ளிட்ட மூவரும் விவசாய நிலத்தில் வாங்க வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
அப்போது ஏற்பட்ட தகராறு காரணமாக, மூவரும் இணைந்து மண்வெட்டி, கடப்பாரை போன்ற ஆயுதங்களால் முருகேசனை தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த முருகேசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது தொடர்பாக வழங்கப்பட்ட புகாரின் அடிப்படையில் முசிறி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பெரியசாமி, அண்ணாவி, சத்யராஜ் உள்ளிட்ட மூவரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணையானது திருச்சி மாவட்ட 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது அரசு தரப்பில் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் ஆஜராகி வாதம் செய்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதி ஜெயக்குமார் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கினார்.
அந்த தீர்ப்பில் இந்த வழக்கில் முதல் குற்றவாளியான சத்யராஜுக்கு ஆயுள் தண்டனையும், கடுமையான காயத்தை ஏற்படுத்தியதற்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2வது குற்றவாளியான பெரியசாமிக்கு இந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனையும், 3வது குற்றவாளியான அண்ணாவியிற்கு இந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனையும் மற்றும் கடுமையான காயங்களை ஏற்படுத்தியதற்காக ஒரு வருட கால சிறை தண்டனையும் விதித்து உத்தரவு பிறப்பித்தார்.
அதோடு, இந்த தண்டனைகளை முழுமையான காலத்திற்கும் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தன்னுடைய தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து, அண்ணாவி, பெரியசாமி, சத்யராஜ் உள்ளிட்ட மூவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.