திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள ஊட்டல் பகுதியில் அடர்ந்த காப்புக்காடு உள்ளது. இந்த காட்டில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அந்த பகுதியில் உள்ளவர்கள் காப்பு காட்டிற்கு தங்களது வளர்ப்பு பிராணிகளான ஆடு, மாடுகளை காலையில் ஓட்டிச்சென்று மேய்த்து விட்டு மாலை 4 மணி அளவில் வீட்டிற்கு திரும்பிவிடுவர்.
முனுசாமியும் அவரது மனைவி உமாவும் ஆம்பூர் அருகே உள்ள பைரபள்ளியில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தாமாக 15-க்கும் மேற்பட்ட வெள்ளாடுகள் உள்ளது. இந்நிலையில் நேற்று வழக்கம் போல் உமா தனது வெள்ளாடுகளை ஊட்டல் பைரப்பள்ளி காப்புகாட்டுக்கு மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றுள்ளார். பிறகு மாலை தனது வெள்ளாடுகளை வீட்டிற்கு ஓட்டி வந்துள்ளார். அப்போது தனது வெள்ளாடு கூட்டத்திலிருந்து ஒரு ஆடு இல்லாததை கண்டுபிடித்து, அந்த ஆட்டை தேடிக்கொண்டு உமா வனப்பகுதிக்கு சென்றார்.
அப்போது காப்புக்காட்டில் அடர்ந்த புதர் பகுதியில் இருந்த மலைப்பாம்பு ஒன்று ஆட்டை விழுங்கிகொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சடைந்தார். ஆட்டின் முழு உடலையும் விழுங்குவதை பார்த்து விட்டு, இதுகுறித்து உமா ஆம்பூர் வனத்துறையிருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் வனத்துறையினர் மலைப்பாம்பை பிடித்து அடர்ந்த காட்டின் உள்ளே விட்டனர். உயிருடன் உள்ள ஆட்டை மலைப்பாம்பு முழுவதுமாக விழுங்கிய சம்பவம் ஆம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.