கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
அந்த பொதுக்குழு கூட்டத்திலேயே மற்றொரு அறிவிப்பையும் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். அதாவது, விரைவில் தொண்டர்களின் ஒப்புதலுடன் நிரந்தர பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தான் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்க்கும் விதமாக, பன்னீர்செல்வம் மற்றும் அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
சென்ற சில தினங்களுக்கு முன்னர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனுவில் அதிமுக பொதுக்குழு குறித்து தாக்கல் செய்யப்பட்டிருக்கின்ற ஆவணங்களின் மீது தேர்தல் ஆணையம் எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் உள்ளதால், கட்சிப் பணிகள் தேக்கமடைந்திருக்கிறது எனவும், ஆகவே தலைமை தேர்தல் ஆணையத்திற்கு சரியான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தார் எடப்பாடி பழனிச்சாமி.
பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் விளக்க மனுவில் தெரிவித்திருப்பதாவது, அதிமுகவை பொருத்தவரையில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தொடர்பாக இதுவரையில் எந்த விதமான முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தை இந்த வழக்கில் மனுதாரராக சேர்க்க இயலாது என்றும், எடப்பாடி பழனிச்சாமியின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆகவே இந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றன.
இந்த மனு மீதான விசாரணையின் முடிவில் உச்சநீதிமன்றம் எந்த விதமான தீர்ப்பை வழங்கப்போகிறது என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பும், பன்னீர்செல்வம் தரப்பும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றன.