ஈரோடு இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெறுகின்ற நிலையில், அதிமுக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் களைகட்ட தொடங்கியது. இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று அதிமுக திமுக என்று இரு கட்சிகளும் மட்டும் இல்லாமல் அதன் கூட்டணி கட்சிகள் மிக தீவிரமாக களம் இறங்கி இருக்கிறது. இந்த சூழ்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுகவின் வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து அண்ணாமலை இடைத்தேர்தலில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அப்போது அவர் பிரச்சார மேடைகளில் பேசும்போது எந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதை போல திமுக தேர்தல் வாக்குறுதியில் 1000 யூனிட் மின்சாரம் கொடுப்பதாக தெரிவித்தது. ஆனால் தற்போது 80 சதவீதம் மின்சார கட்டணம் அதிகரித்திருக்கிறது. தேர்தல் முடிவடைந்த உடன் 100 யூனிட் இலவசம் என்று தெரிவிக்கிறார். யாருக்கும், எதுவும் செய்யாமல் வாக்கை வாங்கி விடலாம் என்று நினைக்கிறார்கள் என்று விமர்சித்திருக்கிறார்.
27ஆம் தேதி தேர்தலுக்குப் பின்னர் தமிழகத்தில் ஆட்சி மாறப்போவதில்லை. ஆனால் சட்டப்பேரவை தேர்தலின் போது திமுக வழங்கிய வாக்குறுதிகளை செயல்படுத்த வேண்டும் என்றால் அதிமுக இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் தென்னரசு வெற்றி பெற்று விட்டால் முதலமைச்சருக்கு காது கேட்கும். அப்போது தான் திமுக தங்களுடைய தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் என்று கூறியிருக்கிறார்.
திமுகவின் 22 மாத ஆட்சி காலத்தில் நாள்தோறும் புது, புது பிரச்சனைகள் தான் வந்திருக்கிறது. பொதுமக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு திமுக அரசு எதையும் செய்யவில்லை.
33 அமைச்சர்களும் மக்களை எப்படி ஏமாற்றலாம் எப்படி பொய் வாக்குறுதியை கொடுக்கலாம் என்று யோசிக்கிறார்கள். 30 ஆண்டு காலமாக தலை நிமிர்ந்து இருந்த காவல்துறை தற்சமயம் திமுகவின் ஆட்சியில் கட்டி வைக்கப்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார் அண்ணாமலை.
தமிழகம் அமைதி பூங்காவாக இருந்து வந்த நிலையில் 22 மாதத்தில் கூட்டு பலாத்காரம் நடைபெற்றுள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்னர் 9 கொலை நடந்திருக்கிறது காவல்துறைக்கு சவால் விட்டு கொலை நடந்து வருகிறது. விடியல் தருவோம் என்று தெரிவித்து ஆட்சிக்கு வந்த திமுக தற்சமயம் டாஸ்மாக் மூலமாக பெண்களின் தாலியை கழற்றுகிறது என்று குற்றம் சுமத்தி இருக்கிறார் அண்ணாமலை.
திருமங்கலம் ஃபார்முலா, அரவக்குறிச்சி ஃபார்முலா போல ஈரோடு பார்முலா என்று கெட்ட பெயர் வாங்கி விடாதீர்கள் என்று வாக்காளர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார் அண்ணாமலை.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை தரக்குறைவாக பேசியவர் தான் இ வி கே எஸ் இளங்கோவன் தன்னுடைய கட்சியில் உள்ள பெண்களை இளங்கோவன் எப்படி நடத்துவார் என்பதை விஜயதாரணியிடம் கேளுங்கள் என்று தெரிவித்திருக்கிறார் அண்ணாமலை.
இந்த தொகுதியில் தேர்தலின் போது வாக்காளர்களுக்கு வைக்கும் மை காயும் முன்னரே இளங்கோவன் சென்னைக்கு ஓடி விடுவார். திமுகவின் கூட்டணி தர்மம் சந்தி சிரிக்கின்றது. இளங்கோவன் ஏழை மக்களுக்கானவர் அல்ல தென்னரசு வெற்றி பெறும்போது திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை நிறைவேற்ற வைக்க முடியும் என்று தெரிவித்திருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.