திண்டுக்கல் மாவட்டம் வேடப்பட்டி என்ற பகுதியை சேர்ந்தவர் தான் சின்னத்தம்பி, இவர் வெள்ளைப் பூண்டு வியாபாரம் செய்து வந்திருக்கிறார். அதோடு இவர் மீது காவல் நிலையத்தில் கொலை, கொள்ளை போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், நேற்று இவருடைய வீட்டினருகே இருக்கக்கூடிய அவருடைய சகோதரர் வீட்டிற்கு உறங்குவதற்காக சென்று உள்ளார்.
அந்த சமயத்தில் 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை வீடு புகுந்து தூங்கிக் கொண்டிருந்தபோது சரமாரியாக அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கி இருக்கிறது. இந்த பயங்கர தாக்குதலில் சின்னத்தம்பி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இது குறித்து அருகில் இருந்த நபர்கள் திண்டுக்கல் தாலுகா காவல்துறையினருக்கு தகவல் வழங்கினர். அதனை அடிப்படையாகக் கொண்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த சின்னதம்பியின் உடலை மீட்டு திண்டுக்கல் மாவட்டம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கிறார்கள். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொடூர கொலை சம்பவம் தொடர்பாக திண்டுக்கல் தாலுகா காவல்துறையை சேர்ந்தவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.