நம்முடைய முன்னோர்கள் குழந்தையும், தெய்வமும் வேறில்லை என்று சொல்லி இருக்கிறார்கள். அப்படி என்றால் குழந்தையும், தெய்வமும் ஒன்றுதான் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கின்ற குழந்தைகள் அனைத்தும் தெய்வத்திற்கு சமமான ஒன்று என நம்முடைய முன்னோர்கள் சொல்லி சென்றிருக்கிறார்கள்.
ஆனால் தற்காலத்தில் அது அப்படியே தலைகீழாக மாறி இருக்கிறது. விபரம் தெரியாத பச்சிளம் குழந்தைகளை பாலியல் தொந்தரவு செய்வது, பிறந்த கைக்குழந்தையை அனாதையை போல ரோட்டில் வீசி செல்வது உள்ளிட்ட கொடூரமான சம்பவங்கள் தமிழகத்தில் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.சென்னை செங்குன்றம் நாரவாரி குப்பம் பகுதியை சேர்ந்தவர் காதர் இவர் செங்குன்றம் பகுதியில் கடந்த 8 வருட காலமாக ஆட்டோ ஓட்டும் தொழிலை செய்து வருகிறார்.
இவர் நேற்று வழக்கம்போல நேற்று மாலை செங்குன்றம் பேருந்து நிலையம் அருகே இருக்கின்ற ஆட்டோ நிறுத்துமிடத்தில் பயணிகளின் சவாரிக்காக காத்திருந்தார். அப்போது ஒரு பெண் கையில் கட்டைபையுடன் வந்திருக்கிறார். அவர் நேராக ஆட்டோ ஓட்டுநர் காதரிடம் வந்து கோயம்பேடு பேருந்து நிலையம் வரையில் செல்ல வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து சவாரிக்கான கட்டணத்தை சொல்லிவிட்டு ஆட்டோ ஓட்டுநர் காதர் அந்த பெண்ணை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு திரும்பி இருக்கிறார்.
இதற்கிடையில் கையில் கட்டை பையுடன் ஆட்டோவில் ஏறிய அந்த பெண் இறங்கி செல்லும்போது அந்த கட்டை பையை ஆட்டோவில் வைத்து விட்டு சென்று விட்டார். ஆனால் அந்த பெண் தவறி அந்த பையை ஆட்டோவில் வைத்துவிட்டு செல்லவில்லை, திட்டமிட்டு இந்த செயலை அவர் செய்திருக்கிறார்.
இந்த நிலையில் தான் ஆட்டோ ஓட்டுநர் காதர் செங்குன்றம் நோக்கி பயணமாகிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அந்த ஆட்டோவில் இருந்து குழந்தை அலறல் சத்தம் கேட்டிருக்கிறது. இதனை கேட்டு அதிர்ச்சிகுள்ளான காதர் ஆட்டோவை நிறுத்திவிட்டு இறங்கி சோதனை செய்து பார்த்தார். அப்போது ஆட்டோவின் பின்புறம் இருந்த கட்டை பையில் பெண் குழந்தை ஒன்று இருப்பதை பார்த்து அதிர்ச்சிகுள்ளானார்.
உடனடியாக இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினரிடம் தகவல் வழங்கினார் காதர். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாதவரம் காவல்துறை ஆய்வாளர் சிவகுமார் 2 மாத கைக்குழந்தையை மீட்டு முதல் சிகிச்சைக்காக அந்த பகுதியில் இருக்கக்கூடிய தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்.
பின்பு இது தொடர்பாக தகவலறிந்த எழும்பூர் குழந்தைகள் நல அமைப்பினர் வந்து முதலுதவி சிகிச்சை முடிவடைந்ததும் டி நகர் பகுதியில் உள்ள பாலமந்திர குழந்தை காப்பகத்தில் குழந்தை ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஆட்டோவில் 2 மாத கைக்குழந்தையை அனாதையாக தவிக்க விட்டு சென்ற பெண்ணை தீவிரமாக தேடி வருகிறார்கள்.